24 மே, 2010

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்குரிய கரிசனையை இந்தியா காட்ட வேண்டும் : ததேகூ

தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வு தொடர்பில் சர்வதேச நாடுகள், விசேடமாக இந்தியா தனது கரிசனையை உரியமுறையில் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தினால், அதனை பரிசீலிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இலங்கை தள்ளப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தீர்வுத்திட்டங்கள் இதுவரைகாலம் சறுக்கிச் சென்றமைக்கு பிரதான காரணம், இனவாத சிந்தனையேயாகும் என்று கூறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சர்வதேச மும் இந்தியாவும் சரியானமுறையில் அழுத்தங்களை பிரயோகிக்குமானால் இனவாத சிந்தனைகள் களையப்படுவதுடன் தீர்வுக்கான வழியும் பிறக்கும் என்றும் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்து.

இலங்கை இந்திய உடன்படிக்கையை மீண்டும் அமுல்படுத்துமாறும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் இந்திய ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியிருப்பதாக சிங்கள ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

"தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முற்றுப் பெறாதிருப்பதற்கும் தசாப்த காலங்களாக அது இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கும் இனவாத சக்திகளின் போக்குகளே காரணமாக அமைந்திருக்கின்றன.

இலங்கை இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் அது சீரான முறையில் முன்னெடுக்கப்பட்டிருக்குமானால் பிரச்சினை இன்றைய அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்காது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

அதில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களை இனவாதம் கொண்ட பெரும்பான்மைக் கட்சிகள் வலுவாக எதிர்த்து வருகின்றன.

தமது சிந்தனைகளை நியாயப்படுத்துகின்ற வகையில் தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் இனவாத அமைப்புக்கள் அதிகாரப் பகிர்வுடனான தீர்வு என்ற விடயத்தில் சிங்கள மக்களிடத்தில் இனவாதத்தை விதைத்து வருகின்றன.

சம உரிமையே தேவை

ஜே. வி. பியும் இவ்விடயத்தில் அதே போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை பெரும்பான்மை சமூகத்திற்கு வழங்கப்படுகின்ற உரிமைகள், சலுகைகளையே கேட்டு நிற்கின்றனர்.

பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாதிருப்பதற்கு விடுதலைப் புலிகளும் யுத்தமும் மாத்திரமே இதுவரையில் காரணங்களாக முன்வைக்கப்பட்டு வந்தன. ஆனாலும் யுத்தம் நிறைவடைந்து புலிகள் அழிக்கப்பட்டதாகக் கூறி ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது.

இந்தச் சந்தர்ப்பத்திலாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்டி விடும் என்று எதிர்பார்த்த ஒட்டுமொத்த மக்களும் ஏமாற்றத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் தற்போது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீண்டும் முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தரப்பில் வலியுறுத்தியிருப்பதானது வரவேற்க வேண்டிய விடயமாகும்.

இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தில் உலக நாடுகள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் உலக நாடுகள் விசேடமாக அண்டைய நாடாகவும் தமிழர் பிரச்சினையில் உரிமையுடன் தலையிடக் கூடிய நாடாகவும் இருக்கின்ற இந்தியாவின் வலியுறுத்தல்கள், அழுத்தங்கள் மேலெழுந்த வாரியாக அல்லாது பலமானதாக அமையும் பட்சத்தில் அதிலிருந்து இலங்கை அரசாங்கத்தினால் விடுபடக் கூடியதாக இருக்காது. மாறாக அந்த அழுத்தங்களுக்கு ஆட்பட்டே தீர வேண்டிய நிலை ஏற்படும்.

நல்ல தீர்வே வேண்டும்

எனவே வரலாற்று ரீதியாக ஏமாற்றப்பட்டு வருகின்ற எமக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். அதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் உந்து சக்தியும் மிகமிக அவசியம் என்பதுடன் இனியும் அரசாங்கம் இனவாதிகளின் கருத்துக்களை கவனத்திற் கொள்ளாது ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்த எதிர்காலத்திற்கு துணையாக அமையும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் நாம் இனவாதப் போக்கை கடைப்பிடிக்கவில்லை. எமது மக்களின் உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் பெரும்பான்மை சமூகம் அனுபவிக்கின்ற அந்தஸ்து எமக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதற்கான குரலாகவே நாம் இருக்கின்றோம்.

எனவே அரசாங்கம் என்ற வகையில் இழுத்தடிப்புகளுக்கு முன்னுரிமை வழங்காது இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஏற்ற வழிவகைகளை உருவாக்க வேண்டும என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.

இவ்விடயத்தில் ஜனாதிபதியின் பங்கு அளப்பரியது என்பதை நினைவுபடுத்துவதற்கும் விரும்புகின்றோம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக