15 மே, 2010

ஆயுள் முழுக்க எலும்பு வலிமை




சிறுவயதில் போதுமான கால்சியத்தை உணவில் சேர்த்து வந்தால், எலும்புகளை பாதுகாப்பதுடன் ஆயுள் முழுவதும் எலும்பு ஆரோக்கியம் நீடிக்கும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் 18 நாட்கள் ஆய்வு நடத்தப்பட்டது. அதுகுறித்து ஆய்வுக் குழு பேராசிரியர் சாத் ஸ்டல் கூறியது:
வாழ்நாள் முழுவதும் எலும்பு ஆரோக்கியம் நீடிக்கச் செய்வதில் கால்சியத்தின் பங்கு பற்றி ஆராயப்பட்டது. பன்றிக் குட்டிகளை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினோம். 24 பன்றிக் குட்டிகள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டன. ஒரு குழுவின் உணவில் கால்சியம் கூடுதலாக சேர்க்கப்பட்டது.
மற்றொரு குழுவில் இருந்த பன்றிக் குட்டிகளுக்கு கால்சியம் குறைவான உணவுகள் அளிக்கப்பட்டன. 18 நாட்களுக்குப் பிறகு 24 பன்றிக் குட்டிகளின் எலும்பு ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டது. கால்சியம் அதிகம் கொண்ட உணவைச் சாப்பிட்டவற்றை விட குறைவாக சாப்பிட்ட குட்டிகளின் எலும்பு அடர்த்தி குறைவாக இருந்தது.
அத்துடன், எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜையில் ஸ்டெம் செல்கள் கொழுப்பாக மாறி இருந்தன. கால்சியம் செறிந்த உணவு சாப்பிட்ட குட்டிகளின் எலும்பு மஜ்ஜைகள், எலும்பை உறுதியாக்கும் செல்களாக மாறியிருந்தன. எனினும், பெரியவர்களின் ரத்தத்தில் கால்சியத்தை முறைப்படுத்தும் விட்டமின் டியின் ஹார்மோன்கள் குறித்து இரண்டு குழுக்களின் ரத்தப் பரிசோதனையில் எந்த மாற்றமும் தெரியவில்லை.
குழந்தை பிறந்ததில் இருந்து கால்சியம், மினரல்கள் உடலில் சேர்ந்தால் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி சிறப்பாக இருப்பதுடன், வாழ்நாள் முழுவதும் எலும்பு ஆரோக்கியம் நீடிக்க உதவும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது என சாத் ஸ்டல் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக