15 மே, 2010

போலீஸ் காவலில் இருந்த போது நித்யானந்தாவிடம் விசாரணை நடத்திய “வீடியோ” காட்சிகள் திருட்டு: தொழில்நுட்ப நிபுணர் கைது





நடிகை ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச காட்சிகள் வெளியானதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த நித்யானந்தா சாமியாரை சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை 8 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து பெங்களூர் சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை நடத்தினார்கள்.

நித்யானந்தாவிடம் விசாரணை நடத்துவதற்காக பொதுப்பணித்துறையினர் சி.ஐ.டி. அலுவலகத்தில் தனி அறை ஒன்றை உருவாக்கி கொடுத்து இருந்தனர்.

அந்த தனி அறையில் நித்யானந்தாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தும்போது, அந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு வீடியோ காட்சிகளை பதிவு செய்யும் உரிமையை பொதுப்பணித்துறையிடம் சி.ஐ.டி போலீசார் ஒப்படைத்து இருந்தனர்.

பொதுப்பணித்துறையினர் இந்த வீடியோ காட்சிகளை பதியும் பொறுப்பை தனியார் நிறுவனம் ஒன்றிடம் கொடுத்து இருந்தனர். அதன்படி, அந்த நிறுவனம் நித்யானந்தாவிடம் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையை நேரடியாக வீடியோவில் பதிவு செய்தார்கள்.

வீடியோ காட்சிகள் அனுமதியின்றி பென் டிரைவ் மற்றும் சி.டி.க்களில் காப்பி செய்யப்பட்டு திருடப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விசாரணையின் போது வீடியோ காட்சிகளை பதிவு செய்த தொழில் நுட்ப நிபுணர் சுரேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தார்கள். அப்போது ஜெயநகரில் உள்ள சிஞ்சனா மீடியா என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் மோகன் என்பவர் உள்பட மேலும் சிலர், நித்யானந்தாவிடம் நடைபெறும் விசாரணையின்போது பதிவு செய்யும் வீடியோ காட்சிகளை திருடி கொடுக்கும்படி சுரேஷிடம் கூறி இருக்கிறார்கள்.

அதன்படி, சுரேஷ்தான் பதிவு செய்த வீடியோ காட்சிகள் சிலவற்றை சி.டி.யிலும், பென் டிரைவிலும் பதிவு செய்து சிஞ்சனா மீடியா நிறுவனத்திடம் கொடுத்ததாக போலீசாரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் சுரேஷை கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, சுரேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிஞ்சனா மீடியா நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள கம்ப்யூட்டர்களில் நித்யானந்தாவிடம் நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிஞ்சனா மீடியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த மோகன் மற்றும் சிலர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

இந்த வீடியோ காட்சிகள் சம்பந்தமாக விளக்கம் அளிக்கும்படி சி.ஐ.டி. போலீசார், சிஞ்சனா மீடியா நிறுவனத்திற்கு நோட்டீசு ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். நித்யானந்தாவிடம் நடத்தப்பட்ட விசாரணை காட்சிகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக