4 ஏப்ரல், 2010

புனர்வாழ்வு பெற்ற மாணவர் யாழ். பல்கலையில் சேர்ப்பு 7ம் திகதி உபவேந்தரால் பொறுப்பேற்பு



புனர்வாழ்வளிக்கப்பட்ட பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் புதன்கிழமை முதல் தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிருப்பதாக புனர்வாழ்வு முகாம்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் அன்றைய தினம் புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து தமது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்திருக்கும் பல்கலைக்கழக மாணவர்களை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்கவிருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து அவர்கள் வழமை போல் பல்கலைக்கழகத்தில் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர முடியுமெனவும் பிரிகேடியர் கூறினார்.

யாழ்ப்பாண புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்களுக்காக எதிர்வரும் 07ஆம் திகதி புதன்கிழமை சித்திரை புதுவருடப் பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தெல்லிப்பளையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொள்ளவிருக்கும் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர், புனர்வாழ்வளிக்கப்பட்ட பின் தமது குடும்பத்தாருடன் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும் மாணவர்களை பொறுப்பேற்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த முதலாம் திகதி புனர்வாழ்வு நிலையங்களிலிருந்த 1365 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வ மாக தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதில் 43 பேர் பல்கலைக்கழக மாணவர்களாவர். இவர்களுள் 12 பேர் மோதல்களின் போது அங்கவீனமடைந்தவர்களெனவும் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

மோதலின் இறுதி கட்ட நடவடிக்கையின் போது படையினரால் மீட்கப்பட்ட இளைஞர், யுவதிகள் புனர்வாழ்வளிக்கப் பட்ட பின்னர் தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை ஏனைய புனர்வாழ்வு நிலையங்களிலும் புதுவருட பிறப்பு கொண்டாட்டங்களை நடத்த ஏற்பாடாகி வருவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க பல அனுசரணையாளர்கள் முன்வந்திருப்பதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக