4 ஏப்ரல், 2010

சட்டத்தின் முன் அனைவரும் சமம்; நான் கூட சிறையில் இருந்தவன்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ






சட்டதிற்கு முன் அனைவரும் சமமானவர்களே. அந்த சட்டத்தில் தலையிட நான் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (3ம் திகதி) தெரிவித்தார்.

பொதுத் தேர்தலின் நிமித்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐ. ம.சு. மு. மாவட்ட மட்டத்தில் நடத்திய பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று கொஸ்வத்தை, புத்ததாச விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்று கையில் :-

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 18 லட்சம் மேலதிக வாக்குகளால் என்னை வெற்றிபெறச் செய்வதற்கு பங்களிப்பு செய்த உங்களுக்கு முதற்கண் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அன்று என்னை நீங்கள் வெற்றி பெறச் செய்திராவிட்டால் இன்று நான் 2 ஞ் 2 கூட்டிலோ அல்லது 2 ஞ் 6 குழியிலோதான் இருந்திருப்பேன். நான் 2 ஞ் 2 கூட்டில் இருந்திருக்கின்றேன். ஆனால் அங்கு தொலைபேசி வசதி இருக்கவில்லை. எனது தாயார் சுகவீனமுற்றிருந்த போதிலும் அவரது இறுதிக் கிரியைகளுக்காகவே என்னை இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். அதுவும் கைவிலங்கு போட்டே அழைத்துச் சென்றனர்.

அன்று ஜனநாயகம் செத்திருந்தது. அந்த நிலை இப்போது இல்லை. நாம் ஜனநாயக விழுமிய நெறிகளின் படி தேர்தல்களை நடத்துகின்றோம். ஜனாதிபதித் தேர்தலைக் கூட இரு வருடங்களுக்கு முன்னரே நடத்தினோம். நாம் இந்த நாட்டின் மனித உரிமைகளுக்காக கதைத்தவர்கள் மட்டுமல்லாமல் அதனை பாதுகாக்கவும் செயற்பட்டவர்கள்.

சட்டத்திற்கு முன் சகலரும் சமம். அன்று உச்ச நீதிமன்ற வரையறைகளுக்கும் அப்பால் சென்று தீர்ப்புக்கள் வழங்கப்பட்ட போதிலும், நாம் பொறுமையுடன் செயற்பட்டோம். நான் உச்ச நீதிமன்ற செயற்பாடுகளில் தலையிட விரும்பாத ஜனாதிபதியாவேன்.

ஜனநாயகத்தைப் போன்று சட்டமும், நீதியும் பாதுகாக்கப்பட வேண்டுமென நான் உறுதியாக நம்புகின்றேன். யுத்தம் நடைபெற்ற போதிலும் நாம் அபிவிருத்தி வேலைத் திட்டங்களைக் கைவிடவில்லை. எமக்கு உலகளாவிய நெருக்குதல் ஏற்பட்டது. உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நெருக்குதல்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். எமது தாய் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையில் சிலர் குழுக்களாக இணைந்து செயற்பட்டனர். அவற்றின் முன்பாக நாம் சளைத்துவிடவில்லை. தற்போதைய அரசியல் யாப்புப் படி தவறு செய்தால் ஜனாதிபதி தவிர பிரதமர், உச்ச நீதிமன்ற நீதியரசர் உட்பட சகலரும் தண்டனைக்கு உட்பட வேண்டியவர்கள். மக்களுக்கு ஒரு நீதியும், அபேட்சகர்களுக்கு இன்னொரு நீதியும் கிடையாது. இந்த நாட்டில் சக்திபடைத்தவர்கள் முதல் சாதாரண ஏழைகள் வரையும் சகலருக்கும் சட்டம் ஒன்று தான். அந்த சட்டத்தில் தலையிட நான் தயாரில்லை.

உணவுக்காக கடன் வாங்கும் கொள்கை எம்மிடம் கிடையாது. ஆனால் கடந்த கால ஆட்சியாளர்கள் உணவுக்காகப் பெற்ற கடனை இன்றும் வட்டியுடன் திருப்பி செலுத்திக் கொண்டிருக்கின்றோம். இந்நாட்டு மக்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பை நாம் உள்ளூர் விவசாயிகளிடம் வழங்கியுள்ளோம்.

இதனடிப்படையில் விவசாயிகளை ஊக்குவிக்கவென உரமானியம், நீர்ப்பாசன வசதி உள்ளிட்ட எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்.

நாம் செயல்திறன் மிக்கவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம்.

அதனால் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களியுங்கள். அதன் பின்னர் மூன்று விருப்பு வாக்குகளையும் பாவியுங்கள் என்றார். இக்கூட்டத்தில் ஐ. ம. சு. மு.யின் கொழும்பு மாவட்ட அபேட்சகர்களான அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த், தினேஷ் குணவர்த்தன, பாட்டலி சம்பிக்க, முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச, சுதர்மன் ரதலிய கொட, துமிந்த சில்வா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக