30 மார்ச், 2010

நளினி விடுதலை மனு: அரசு ஏற்கவில்லை பின்வரும் காரணங்களினால் விடுதலை கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக







இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினியின் விடுதலை கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை.

தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்பாக தான் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி நளினி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் சிறை ஆலோசனைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நளினியை விடுதலை செய்வது உகந்ததல்ல என்ற சிறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

காரணங்கள்

பின்வரும் காரணங்களினால் விடுதலை கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

* நளினி மிகக் கடுமையான குற்றம் புரிந்துள்ளார். முக்கிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக நளினி உள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் நளினிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.
* நளினியின் மனப்பான்மை மாறவில்லை. அவர் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் இல்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.
*
* நளினியின் தாய், தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி வெளியில் வந்த தங்குவதற்கு அவருடைய பெற்றோர்கள் பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததை கவனத்தில் கொண்டுள்ளோம். நளினியின் பெற்றோர் கங்கை அம்மன் தெருவில் தங்கியிருக்கிறார்கள். அது விஐபிகள் வசிக்கும் இடம். அமெரிக்க தூதரகம் போன்ற முக்கியமான அலுவலங்கள் இருக்கக்கூடிய இடமாக அது இருக்கிறது. அங்கு தங்கினால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும்.
* தன்னுடைய குழந்தைக்கு தாயாக இருப்பதையே நளினி விரும்புகிறார் என்ற கோரிக்கைய ஏற்க முடியாது.
* 18 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்காக, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது.
* இதற்கு முன்னாள் நளினியின் செயல்கள், நடவடிக்கைகள் ஆகியவைகளை ஆராய்ந்துள்ளதால் முன்கூட்டியே அவரை விடுதலை செய்ய முடியாது.
* அவரை பரிசோதித்த மனோதத்துவ மருத்துவரும் விடுதலை செய்யலாம் என்று உறுதியாக கூறவில்லை.

பொதுவாக 14 ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகு நன்னடைத்தை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆயுள்தண்டனை பெற்றவர் விடுதலை செய்யப்படலாம்.

தன்னை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையினை முன்னர் நிராகரித்த ஆலோசனைக் குழு சரிவர உருவாக்கப்படவில்லை என்ற நளினி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை கடந்த மார்ச் 11ஆம் நாள் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான அரசின் முடிவுதான் தற்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கடந்த 2006ஆம் ஆண்டில் திமுக நிறுவனர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி 472 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டபோதே தன்னையும் விடுதலை செய்திருக்க வேண்டும்; அவ்வாறு செய்யாதது தவறு" என்று கூறி நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிபதிகள்

நீதிபதிகள் இலிபி தர்மாராவ் மற்றும் சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் அவ்வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.

ஆனால் மத்திய புலனாய்வுத்துறை விசாரித்த வழக்கில் தண்டனை பெற்றோர் பொதுமன்னிப்பிற்கு தகுதி உடையவர அல்ல என்று தமிழக அரசு கூறியது.

இது ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கமல்ல என்று நளினியின் வழக்கறிஞர்கள் வாதாடினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டபின் நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

பின்னர் ஒரு நாள் வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படும்.

ராஜீவ் காந்தி கொலைச் சதிக்கு உதவினார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி கடந்த 19 வருடங்களாக சிறையில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக