1 டிசம்பர், 2010

நீதி அமைச்சின் கீழ் இராணுவ நீதிமன்றம் இன்மையால் அது சட்டத்துக்குட்பட்டதல்ல: ரணில்

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம், நீதியமைச்சின் கீழ் வருகின்ற விடயதானங்களில் இராணுவ நீதிமன்றம் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனவே இராணுவ நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்பதும் தெளிவாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் விளக்கமளித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட முதலாவது நாள் குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்துப்பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க இங்கு மேலும் கூறுகையில்: இந்நாட்டில் நல்லாட்சியொன்றையே எதிர்பார்த்திருக்கின்றோம். இந்த நிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம் அமைச்சுகளுக்கும் அதன் கீழ் வருகின்ற நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படுகின்ற நிதியானது பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கவேண்டும்.

அதன்படி இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நீதியமைச்சின் கீழ் உயர் நீதிமன்றம் ,மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் தொழில் நீதிமன்றம் என சகல நீதிமன்றங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கின்ற அதேவேளை இராணுவ நீதிமன்றம் தொடர்பில் இங்கு எதுவுமே கூறப்பட்டிருக்கவில்லை.

எனவே இராணுவ நீதிமன்றமானது சட்டத்துக்கு அமைவானது அல்ல என்பது தெளிவாகின்றது. வரவு செலவுத்திட்டத்தில் நீதியமைச்சுக்கான விடயதானங்களில் இராணுவ நீதிமன்றம் குறித்து குறிப்பிடப்படாததால் அது சட்டத்துக்கு உட்பட்டதல்ல எனக்கூறுவதற்கு எமக்கு உரிமை இருக்கின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் ஜனாதிபதி இங்கு வந்திருந்தபோது உரையாற்றுகையில் தமது நாட்டில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்று தெரிவித்தார். அதே போல் மியன்மாரிலும் அரசியல் கைதிகள் இல்லையெனத் தெரிவித்தார். ஆனாலும் எமது நாட்டில் அரசியல் கைதிகள் இருக்கின்றனர். முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா இன்று அரசியல் கைதியாக இருக்கிறார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரி இலங்கையின் நிலைமைகளை அறிந்து கொண்டுதான் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். எனவே சரத்பொன்சேகாவை விடுதலை செய்து பாகிஸ்தான் மற்றும் மியன்மாரைப் போன்று அரசியல் கைதிகள் இல்லாத நாடாக இலங்கை மாற்றப்படவேண்டும் என்று கேட்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக