1 டிசம்பர், 2010

முல்லைத்தீவு மாவட்டம் எஞ்சியுள்ள குடும்பங்கள் இம்மாத இறுதிக்குள் மீள்குடியேற்றம் அரசாங்க அதிபர் வேதநாயகம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் எஞ்சியுள்ள சுமார் ஆறாயிரம் குடும்பங்களை இந்த மாத இறுதிக்குள் தங்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற நடவடிக்கைகளை விரைவில் பூர்த்தி செய்யும் வகையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் இதுவரை 22 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயி ரம் மக்கள் தத்தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய ஐந்து உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலுள்ள ஆறாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரம் பொதுமக்கள் மாத்திரமே மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர் என்றும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோரின் வழிகாட்டலில் இதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக் கிழமை முறிகண்டி பிரதேசத்தில் 150 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப் படவுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தேவாவில் கிராம சேவகர் பிரிவில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 722 மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதாகவும் என். வேதநாயகம் தெரிவித்தார்.

இதேவேளை முல்லைத்தீவு நகர், ஒட்டுசுட்டான், முள்ளியாவளை, பாண்டியன் குளம் மற்றும் மல்லாவி ஆகிய பகுதிகளுக்கு தற்போது மின்சார விநியோகம் வழங்கப்பட்டுள் ளதாகவும் எஞ்சிய பகுதிகளுக்கு அடுத்த ஆண்டு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக