1 டிசம்பர், 2010

பலாலியில் இந்திய சர்வதேச விமானநிலையம்?:உண்மைத்தன்மையை வெளிப்படுத்த கோரிக்கை

இந்திய விமான சேவைகள் அதி கார சபையினூடாக பலாலியில் சர்வதேச இந்திய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாகவும், இது தொடர்பிலான மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளிவருகின்ற தகவல்கள் தொடர்பிலான உண்மைத் தன்மையை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க நேற்று சபையில் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் இந்திய விமான சேவை அதிகார சபை இங்கு விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனடிப்படையில் பலாலி விமான தளம் தொடர்பிலான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகளுக்கு அரச தரப்பிலிருந்து இதுவரையில் மறுப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இது இவ்வாறிருக்க எமது நாட்டில் விமான நிலையம் ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் அதற்கு 400 முதல் 450 கோடி ரூபா வரையில் செலவிடவிருப்பதாகவும் இந்திய விமான சேவை அதிகார சபை அறிவித்திருக்கின்றது.

வடக்கிற்கான படைக் கட்டளைத் தலைமையகம் பலாலியிலேயே அமைத்துள்ளது. பலாலி விமான தளமானது பாதுகாப்பு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறானதோர் இடத்தில் சர்வதேச விமான நிலையமொன்றை அமைக்கும் பட்சத்தில் அங்கு பாதுகாப்பு சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்படும் அதுமட்டுமன்றி இந்திய விமான சேவை அதிகார சபைக்கு பலாலியை கொடுப்பதானது இரகசியமாக மேற்கொள்ளப்படவேண்டிய விடயமல்ல இதிலுள்ள உண்மை நிலைவரங்கள் தொடர்பில் அரசாங்கம் இந்த பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறோம்.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிக்கொண்டது மட்டுமல்லாது சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் பாராளுமன்ற சபையை ஸ்தாபித்து அதனூடாக ஆணைக்குழுக்களை அமைப்பதாகவும் அரசாங்கத்தினால் கூறப்பட்டது. ஆனால் 18 ஆவது திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்வதற்கு இருந்தவேகம் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதில் அரசாங்கத்திடம் இல்லை.

இது ஒரு புறமிருக்க நடை முறையிலுள்ள ஆணைக்குழுக்கள் அனைத்தும் செயலிழந்து கிடக்கின்றன. எனவே சுயாதீன ஆணைக்குழுக்களை உடனடியாக நியமிக்கவேண்டும், மேலும் கஷ்டப்படுகின்றவர்களுக்கும் தொழில் இல்லாதவர்களுக்கும் என்றே ஜனாதிபதி நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் அந்த நிதியத்தின் நோக்கம் நிறைவேற்றப்படுவதாகத் தெரியவில்லை.

ஜனாதிபதி நிதியத்தின் கட்டுப்பாட்டுச் சபையானது நீண்ட நாட்களாக கூடாமல் இருக்கின்றது. நிதியத்தின் செயற்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையைக் காண முடியவில்லை. நிதியத்திலிருந்து வசதியில்லாதவர்களுக்கும் கஷ்ட நிலைக்கு உள்ளாகியவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகின்றனவா என்பதில் சந்தேகம் தான் நிலவுகின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக