1 டிசம்பர், 2010

ஐ. தே. க. ஆட்சியிலேயே புதுப்புது பெயர்களில் அமைச்சுக்கள்



ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், மாவட்ட அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் என புதுப்புது பெயர்களில் அமைச்சர் பதவிகளை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தற்போதைய அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது என அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த சர்ச்சையொன்றுக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு-செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் எதிர்க்கட்சியின் சார்பில் ஜோன் அமரதுங்க எம்.பி. உரையாற்றிக் கொண்டிருந்தபோது இடை நடுவில் குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க; புதிய அமைச்சரவை நியமனத்தில் சிரேஷ்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம், பொறுப்புகள் மற்றும் நிதியொதுக்கீடு சம்பந்தமாக கேள்வியெழுப்பினார்.

இதன்போது அமைச்சர் விமல் வீரவன்ச புதிய சிரேஷ்ட அமைச்சர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினார். சகல சிரேஷ்ட அமைச்சர்களுக்கும் உரிய பொறுப்புகளும் அதற்கான நிதியொதுக்கீடுகளும் வழங்கப்பட்டுள்ளன என்பதை எதிர்க்கட்சித் தலைவர் விளங்கிக்கொள் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது விளக்கமளித்த சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மேற்படி சிரேஷ்ட அமைச்சர்களின் செயற்பாடுகள் சம்பந்தமாக வர்த்தமானியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்பதையும் திட்டவட்டமாக நிராகரித்தார். மூலதன செலவினம் உட்பட சகலவற்றிற்கும் அவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 45வது சரத்துக்கமைய பிரதமருடன் கலந்துரையாடி ஜனாதிபதியானவர் சிரேஷ்ட அமைச்சர்களை நியமிக்கமுடியும். இவர்களுக்கு வெவ்வேறாக நிதி ஒதுக்கப்படாவிட்டாலும் பொதுவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பான சர்ச்சை நேற்று சபையில் சில நிமிடங்கள் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக