1 டிசம்பர், 2010

சிரேஷ்ட அமைச்சர்களால் சபையில் எழுந்த சர்ச்சை

2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் ஆரம்பித்துவைக்கப்படுவதற்கு முன்பாக சிரேஷ்ட அமைச்சர்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் எழுப்பப்பட்ட கேள்வியினால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

சிரேஷ்ட அமைச்சர்களுக்கான நிதியொதுக்கீடு தொடர்பிலேயே எதிர்க்கட்சித் தலைவர் நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். இதனையடுத்து ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதங்கள் எழுந்தன. இதன்போது சபாநாயகரின் அறிவுறுத்தல்களும் கவனத்திற்குக் கொள்ளப்படாத நிலையில் இரு தரப்பு உறுப்பினர்களும் உரத்த தொனியில் தமது வாதங்களை முன் வைத்தனர். இதற்கிடையே கூச்சல் குழப்பங்களும் ஏற்பட்டன.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளின் பிரதான நடவடிக்கைகளின் பின்னர் குழுநிலை விவாதம் நடத்தப்படுவதற்கான அறிவித்தலை சபாநாயகர் விடுத்தார். இதற்கிடையில் ஒழுங்கு பிரச்சினையொன்றைக் கிளப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, புதிய அமைச்சரவையில் சிரேஷ்ட அமைச்சர்களாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிதியொதுக்கீடுகள் குறித்து இந்த வரவு செலவுத் திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் இந்த அமைச்சர்களுக்கென செயலாளர்கள் இல்லை. இவர்களுக்கு அதிகாரங்கள் இல்லை. சிரேஷ்ட அமைச்சர்கள் என்பதற்குப் பதிலாக இவர்கள் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் நியமிக்கப்பட்டுள்ள 10 சிரேஷ்ட அமைச்சர்களில் மூவரே இங்கு அமர்ந்துள்ளனர் என்றும் கூறி விட்டு சபையை விட்டு வெளியேறினார்.

இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க பேசிக் கொண்டிருந்த போதும் வெளியேறிய போதும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.பி.க்கள் தொடர்ச்சியான இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். இதன்போது ஒழுங்கு பிரச்சினையொன்றைக் கிளப்பிய அமைச்சர் விமல் வீரவங்ச கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. ஏனெனில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களை அறிமுகப்படுத்தியவரே ரணில் விக்கிரமசிங்கதான். எனவே தற்போதைய சிரேஷ்ட அமைச்சர்கள் குறித்து அவரால் கேள்விகளை எழுப்ப முடியாது என்றார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர எம்.பி. கூறுகையில், சிரேஷ்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிதியொதுக்கப்படுகின்றதா இல்லையா என்ற கேள்வி ஒரு புறத்தில் இருந்தாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற பொறுப்புக்கள் என்னவென்பதே எமது கேள்வியாக இருக்கின்றது என்றார்.

இதனையடுத்து கூறிய ரவி கருணாநாயக்க எம்.பி. ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் எமது அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் விடயத்தில் கட்சி நியாயமாகவே நடந்து கொண்டது. ஆனால் அவ்வாறு இந்த அரசாங்கத்தில் இல்லை. இதனைத்தான் கேட்கிறோம் என்றார்.

இதன்போது பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா, சிரேஷ்ட அமைச்சர்களுக்கு நிதி ஒதுக்கம் இல்லையென்றும் அவர்களுக்கு பொறுப்புக்கள் கையளிக்கப்படவில்லை என்றும் இங்கு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் அவர்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதிகள் ஒதுக்கப்பட்டள்ளன என்றார்.

அமைச்சர் நிமல் சிறி பால டி சில்வா இவ்வாறு பதிலளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலும் ஆளும் எதிர்க்கட்சிகளிடையே கூச்சலும் குழப்ப நிலையும் காணப்பட்டது.

இந்நிலையில் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு தேவையான நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இவ்விடயத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுமாறு கேட்டதுடன் அடுத்த பணிகளுக்கு செல்ல விருப்பதாகவும் அறிவித்தார்.

சபையின் கூச்சல் குறைந்திராத போதிலும் தயாசிறி எம்.பி. தொடர்ந்தும் ஒழுங்கு பிரச்சினை எழுப்பிக் கொண்டிருந்தார். ஒழுங்கு பிரச்சினைக்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு வெகு நேரமாக சபாநாயகரைக் கேட்டுக் கொண்டிருந்த தயாசிறிக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் எதுவும் பேசக் கூடாது. அது முடிவு அறிவிக்கப்பட்ட விடயம் எனக் கூறி எச்சரித்தார்.

இருந்தும் தயாசிறி எம்.பி அரசியலமைப்பைச் சுட்டிக்காட்டி பழைய கதைக்கே வந்த போது அவரது ஒலிவாங்கி முடக்கப்பட்டு விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக