19 டிசம்பர், 2010

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியளிக்க ஐ.நா. நிபுணர் குழு வந்தால் அரசாங்கம் உரிய ஏற்பாடு


ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் அஜராக விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கத் தயார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் சரத்துக்கமைய, 2010 ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் திகதி பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட பகிரங்க அறிவிப்பின் கீழ், ஆணைக்குழு முன்னிலையில் யாரும் சாட்சியமளிக்க முடியும்.

இதற்கமைய, நல்லிணக்க ஆணைக்குழு முன்நிலையில், நிபுணர்கள் குழு ஆஜராக விரும்பினால் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க நாம் தயார். இந்த நிலைப்பாடு நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்து நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் ஜனாதிபதியின் நெகிழ்வுத்தன்மை பாராட்டுக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தமக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் பான் கீ மூன் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையிலேயே நல்லிணக்க ஆணைக்குழு முன் ஆஜராக ஐ. நா. நிபுணர்கள் குழு விரும்பினால் அதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக