19 டிசம்பர், 2010

இலங்கை இனியும் வறிய நாடல்ல’ தேவையான உதவிகள் வழங்க தயாரென உலக வங்கி அறிவிப்பு


இலங்கை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சரியான ஸ்திரமான இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தனி நபர் வருமானம் 2000 டொலர்களை விஞ்சி செல்கி றது. இந்த நாடு இனி யும் வறிய நாடல்ல. உலக வங்கி எந்நேரமும் இலங்கைக்கு தேவையான கடனை வழங்க ஆயத்தமாக இருக்கிறது என உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கோஷி ஓகன்ஜோ ஐவலா தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப் பாளர் அலரி மாளிகையில் ஜனாதி பதியையும் சந்தித்து உரையாடினார்.

மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் குறைந்த வருமானம் பெறும் நாடாக இலங்கை இருந்தது. ஆனால், இன்று நாட்டில் நிலவும் சமா தானச் சூழலுக்கு மத்தி யில் துரித பொருளாதார வளர்ச்சியை நாடு எட்டியுள்ளது.

உலக வங்கி இலங்கைக்கு தேவையான கடனை மேலும், மேலும் வழங்குவதற்கும் ஆயத்தமாக இருக்கிறது. அத்துடன் 265 மில்லியன் டொலர்களையும் உலக வங்கி இலங்கைக்கு வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும் விதத்திலேயே இந்த தொகை மேலதிகமாக வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

பொருளாதார சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்ட நாடான இலங்கைக்கு எந்தவித அச்சமும் இன்றி கடன் வழங்கக் கூடியதாக இருக்கிறது எனவும் உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக இலங்கையின் அனுபவங்கள், அறிவு தொடர்பாக உலக வங்கி பகிர்ந்து கொள்ளவும் ஆவலாய் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அபிவிருத்தி தொடர்பாக புதிய ஒரு யுகத்தினுள் பிரவேசிக்கிறது. சமாதானத்துடன் மனிதாபிமான முன்னெடுப்புக்களையும் சமமாக முகாமைத்துவப்படுத்திக் கொண்டு செல்லும் இலங்கை, இதற்கு சமமான நாடுகளில் முதன்மை வகிக்கும் நாடாக திகழும் என்பதில் எவ்வித ஐயமுல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது மத்திய வங்கியின் ஆளுநர் நிவாட் அஜித் கப்ரால், ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக