19 டிசம்பர், 2010

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கைத் தமிழர்கள்

முப்பது வருடங்களாக நாட்டில் இடம்பெற்றுவந்த யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்ற தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்ப ஆரம்பித்துள்ளமை ஒரு வரவேற்கத்தக்க விடயம். யுத்தம் முடிவுற்றதும் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்புமாறு அழைப்பினை விடுத்திருந்தார்.

என்றோ ஒரு நாள் யுத்தம் முடிவுறும், தமது சொந்த ஊருக்குத் திரும்பிவந்து வீடுவாசலைத் திருத்தி உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதே மண்டப முகாம்களில் தங்கியிருந்த இவர்களது எதிர்பார்ப்பாக இருந்தது. அது இப்போது நிறைவேற ஆரம்பித்துள்ளது.

யுத்தம் காரணமாக வள்ளங்களிலும், தோணிகளிலும் பாதுகாப்பின்றி உயிர்தப்பினால் போதும் என்று தப்பியோடிவர்களே இவர்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் இன்று கொடிய பயங்கரவாதம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டுள்ளது. இப்போது பயமில்லாத ஒரு சுதந்திரமான வாழ்க்கையை முழு நாட்டு மக்களுமே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு பகுதியைச் சேர்ந்த இந்த இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த மக்கள் நாடு திரும்புவது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. தமிழகத்தில் அகதிகளாக வெளியிடங்களுக்குச் சுதந்திரமாகச் செல்ல முடியாது அடைபட்ட நிலையில், வயிறு நிறையாத அவர்கள் கொடுக்கும் உணவுடன் காலத்தைக் கடத்திவரும் இவர்கள் நாடு திரும்பி நிம்மதியாகத் தமது சொந்த ஊர்களில் வாழ்வதே சிறந்தது.

ஆர்வத்துடன் நாடு திரும்பியுள்ள இம்மக்களை அரசாங்கம் அரவணைத்து வரவேற்றுள்ளது. நிவாரணங்களை வட்டியில்லாக் கடன் வசதிகள், வீடமைப்பு வசதிகள் எனச் சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்கியுள்ள ஏனைய எமது சகோதர மக்களும் எவ்விதமான தயக்கமுமின்றி நாடு திரும்பி இயல்பு வாழ்வை சோகங்கள் களையப்பட்ட தமது சொந்த மண்ணில் சுதந்திரமாக ஆரம்பிக்க வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பாகும். இது ஏனைய நாடுகளிலுள்ள நல்லெண்ணம் கொண்ட எமது புலம்பெயர் சமூகத்திற்கும் ஒரு எடுத்துக் காட்டாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக