19 டிசம்பர், 2010

நாரஹென்பிட்டி பொருளாதார நிலையத்திலுள்ள சட்டவிரோத கடைகளை அகற்ற உத்தரவு


நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் உள்ள அனைத்து சட்ட ரீதியற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கடைகளையும் அகற்றி விடுமாறு கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸன் பெர்னாண்டோ நாராஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தின் முகாமையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சுமார் 02 மணித்தியாலங்களுக்கு மேல் நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தை சுற்றிப் பார்வையிட்ட அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ மூடியுள்ள கடைகளை உடனடியாக அரச உடைமையாக்குமாறும் பணித்துள்ளார்.

இதற்கு முன்னர் இங்கு விஜயம் செய்தபோது மூடியுள்ள கடைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். எனினும் அதனைப் பொருட்படுத்தாது மூடியுள்ள அனைத்து கடைகளும் இன்று முதல் மீண்டும் அரச உடைமை யாக்கப்படும்.

இவ்வாறு மீள அரச உடைமையாக்கப்படும் கடைகளில் லங்கா சதொச, நெல் சந்தைப்படுத்தல் சபைகள் அரிசி விற்பனை நிலையங்கள், மரக்கறி, முட்டை, கோழி இறைச்சி போன்ற விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. மேலும், நாராஹேன்பிட்டி பொருளாதார நிலையத்திலுள்ள கடைகளில் களஞ்சியசாலைகளை அமைத்துள்ள வர்த்தகர்களிடம் உடனடியாக விற்பனை நிலையங்களை திறக்குமாறும் அமைச்சர் வலியுறுத்தினார். ஒரு வாரத்திற்குள் இவ்வாறு களஞ்சியங்களாக பயன்படுத்தும் கடைகளில் விற்பனை நிலையங்கள் திறக்கப்படாத பட்சத்தில் அவற்றின் உரிமையும் கட்டாயம் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் எச்சரித்தார்.

வியாபாரிகளுக்குத் தேவையான வசதிகளை தாம் ஒழுங்கு செய்து தருவதாகவும், பொருளாதார நிலையங்களில் ஒழுக்கம் பேணப்படல் வேண்டுமெனவும், பொருளாதார நிலையங்களில் பொருட்களின் விலைகள் குறைவு என்ற மக்களின் நம்பிக்கையினை உறுதி செய்யும் வகையில் விற்பனை நடவடிக்கைகள் இடம் பெற வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக