29 டிசம்பர், 2010

2010ல் வீதி ஒழுங்குகளை மீறியதற்காக 119 பில். ரூபா அறவீடு

வீதி ஒழுங்கு விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 2010ஆம் ஆண்டில் 119 பில்லியன் ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இதேவேளை 2011 ஜனவரி முதல் வாகன போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டு பொலிஸ் திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வேலைத் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபர் மேலும் தகவல் தருகையில்:

போக்குவரத்து விதிகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்பிற்கமைய வாகனங்களில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என்று குறிப்பிட்ட அவர், அது ஜனவரி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

வீதி போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் தேவையான ஆலோசனைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக