வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று கூறினார்.
மட்டக்களப்பிற்கு 20 இலட்சமும் திருகோணமலை மற்றும் பொலன்னறு வைக்கு தலா 5 இலட்சமும் அனுப்பப்பட்டு ள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை சேதமடைந்த வீடுகளுக்காக நஷ்டஈடு வழங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை, திருகோணமலை, இரத்தினபுரி, மாத்தறை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது.
இது வரை 56,643 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1100 குடும்பங்களைச் சேர்ந்த 4141 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக 500க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
முகாம்களில் உள்ள மக்களுக்கு உலர் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட அரச அதிபர்களுக்கு நிதி அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். தேவையான அளவு நிதி கிடைத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு
கிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் அடை மழையினால் மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பாக உடனுக்குடன் அறிவிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அவசர பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தம் தொடர்பாக 0652223151 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் காலை 8.30 மணி தொடக்கம் நேற்றுக் காலை 8.30 மணி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 57.2 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய உத்தியோகத்தர் தெரிவித்தார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 57 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை சற்று குறைவடைந்துள்ளதையடுத்து வெள்ளம் வடிந்து வருகிறது. மக்கள் தங்கியிருந்த 3 முகாம்கள் மூடப்பட்டுள்ளன.
ஓட்டமாவடிப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கொண்டு வருவதில் ஓட்டமாவடிப் பிரதேச சபை தவிசாளர் எம். கே. சாகுல் ஹமீட் தலைமையில் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.
இதன் பிரகாரம் ஓட்டமாவடி 1ம், 2ம், 3ம் வட்டாரங்களில் வெள்ளநீர் தேங்கி நின்ற இடங்களிலிருந்தும் நீரை வெளியேற்ற பெகோ ரக வாகனத்தின் மூலம் வடிகான்களை வெட்டும் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புன்னக்குடா மற்றும் ஏறாவூர் பிரதான வீதியில் உள்ள வடிகான்களை துப்புரவு செய்து அகலமாக்குமாறும், இந்நடவடிக்கைகளுக்கு உடனடியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதியில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.
அத்துடன், மழை வெள்ளம் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சீர்செய்ய அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கூட்டம் ஏறாவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக கிட்டங்கி தாம்போதியின் மேலாக பால நிர்மாணிப்புக்கென வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் போடப்பட்ட தற்காலிக வீதி உடைப்பெடுத்துள்ளதுடன், மூன்று அடிக்கு மேல் வெள்ளமும் பாய்ந்து வருகின்றது. இதன் காரணமாக கல்முனை நகரையும், நாவிதன்வெளி கல்லோயா குடியேற்றக் கிராமங்களையும் இணைக்கும் கிட்டங்கி வீதியூடான வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
வவுனியா
வவுனியா மாவட்டத்தின் மிகப் பெரிய நீர்ப்பாசன திட்டமாகவுள்ள பாவற்குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
பத்து ஆண்டு இடைவெளிக்கு பின்னர் குளம் நிரம்பியுள்ளது. நீர் கொள்ளளவு 19 அடி 6 அங்குலமாக உயர்ந்துள்ளது. மேலும், நீர் மட்டம் உயர்ந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வந்து சேரும் மேலதிக நீரை வெளியேற்ற நான்கு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன என பாவற்குளத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்துவந்த மழை காரணமாக அனுராதபுர மாவட்டத்தின் பாரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான ?!டூசியாதீவுக் குளத்தின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்வடைந்ததால், இரண்டாவது தடவையாகவும் மீண்டும் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
ஏற்கனவே, கடந்த நவம்பர் மாதம் இக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மூடப்பட்ட பின் இம்மாதம் இரண்டாவது தடவையாகவும் இது திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்குளத்தின் ஆறு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இது தவிர துவரலை, எட்டுமதகு, பெரியஅலை, சின்ன அலை போன்றவைகளின் ஊடாகவும் இக்குளத்தின் நீர் திறந்து விடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்
யாழ். மாவட்டத்தில் நேற்று முழு நாளும் நல்ல மழை பெய்துள்ளது. நேற்றுக் காலை முதல் முப்பத்தைந்து மில்லி மீற்றர் மழை பெய்திருப்பதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வழமையான மழை வீழ்ச்சி எனவும், மழை தொடர்ந்து பெய்யுமெனவும் எதிர்வு கூறியுள்ளார்.
இவ்வருடம் டிசம்பர் மாதம் 28ம் திகதி வரை 1480 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகவும், இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகக் கூடிய மழை வீழ்ச்சியாக காணப்படுவதாகவும் திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி என். புஷ்பநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை முதல் அடை மழை பெய்தமையால் நகரின் இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்து வர்த்தக நடவடிக்கைகள் மோசமாக பாதிப்படைந்திருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக