29 டிசம்பர், 2010

ஜனாதிபதி மஹிந்த - இந்திய பாதுகாப்பு செயலர் சந்திப்பு:



இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு மேலும் வலு

1400 படையினருக்கு பயிற்சி வழங்க இந்தியா இணக்கம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பலப்படுத்தப்படுமென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அவர், நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இரு நாட்டுப் படைகளையும் உள்ளடக்கி யதாக பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விஸ்தரிக்க வேண்டுமென இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அமைய 2011 ஆம் ஆண்டு இலங்கை - இந்தியக் கடற்படையினர் கலந்து கொள்ளும் கூட்டுப் பாதுகாப்பு ஒத்திகையை இலங்கையில் நடத்துவது தொடர்பிலும் இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைப் பாதுகாப்புப் படையினர் 1400 பேருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்க முன்வந்திருப்பதாகவும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர், ஜனாதிபதியுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நட்புறவை வரவேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா முன்வந்திருப்பதை இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமாருடனான சந்திப்பில் வரவேற்றார்.

அடுத்தவருடம் நடைபெறவிருக்கும் இலங்கை விமானப் படையின் வைர விழாவில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்திய விமானப் படையின் சார்பில் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் ஏற்றுக் கொண்டார்.

நேற்றைய சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே. காந்தா, இந்திய முப்படைகளின் பிரதிநிதிகள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை வந்திருக்கும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார், இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக