மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் குமார் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இருதரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பிலான பேச்சுக்களின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இந்த பேச்சுக்களில் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை நீடிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதுடன் அதனை மேலும் வலுப்படுத்துவது எனவும் குறிப்பாக களப் பயிற்சிகளை இரு தரப்பும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதெனவும் இணக்கம் காணப்பட்டது.
வருடாந்த பாதுகாப்பு பேச்சுக்களை 2011 ஆம் ஆண்டு முற்பகுதியில் ஆரம்பிப்பது எனவும் இங்கு இணக்கம் காணப்பட்டது. அதுமட்டுமன்றி கடல் பாதுகாப்பு பந்தோபஸ்து தொடர்பில் இருதரப்பும் மதித்து நடப்பதெனவும் இவ்விவகாரம் தொடர்பில் தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது குறித்தும் பேசப்பட்டது.
கடற்படை, தரைப்படை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுக்களை நடத்துவதெனவும் இரு நாடுகளும் இணைந்து கடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் இதனை புதுவருடத்தில் ஆரம்பிப்பது எனவும் இணக்கம் காணப்பட்டது.
இருநாடுகளுக்கும் இடையில் பாரம்பரிய உயர்மட்ட பரிமாற்றங்களை தொடர்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும் இந்திய விமானப் படையின் பாதுகாப்பு பிரதானி ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் பலாலி விமானத் தளத்தை பிராந்திய விமானப் போக்குவரத்து தளமாக மீள ஆரம்பிப்பதுடன் காங்கேசன் துறைமுகத்தை உள்ளூர் வர்த்தக மற்றும் வாணிபத் துறைமுகமான பயன்படுத்துவது தொடர்பிலான பாரிய திட்டங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக