அடுத்த வருடம் முதல் தெங்குப் பயிர்ச் செய்கைக்காக உர மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெங்கு பயிர்ச் செய்கை சபை கூறியது. 50 கிலோ கிராம் தெங்கு உரம் தற்பொழுது 3000 ரூபாவுக்கு விற்கப்படுவதோடு, அதனை ஆயிரம் ரூபாவுக்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெங்குப் பயிர்ச் செய்கை சபை தலைவர் சரத் கீர்த்திரத்ன நேற்று கூறினார்.
தெங்கு உற்பத்தி குறைவடைந்து தேங்காய் விலைகள் அதிகரித்துள்ளதை யடுத்தே தெங்குப் பயிர்ச் செய்கைக்காக உர மானியம் வழங்குவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் உயர்மட்டக் கூட்டமொன்று நடத்தப்பட்டது. இதன் போதே தென்னைக்காக உர மானியம் வழங்குவது குறித்து ஆராயப்பட்டது.
அமைச்சரவை அனுமதி கிடைத்த பின்னர் உரமானிய திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. தென்னைக்கு உர மானியம் வழங்குவது தொடர்பில் நேற்று திறைசேரி அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தப்பட்டதாக தெங்கு பயிர்செய்கை சபை தலைவர் கூறினார்.
ஏற்கனவே தேயிலை, இறப்பர் என்பவற்றுக்கு உர மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் 80 வீதமான தென்னை பயிர்ச் செய்கைக்கு பசளை பயன்படுத்தப்படுவதில்லை. எனினும் ஒரு தென்னை மரத்திற்கு உரம் இடுவதற்கு வருடாந்தம் 150 ரூபா மட்டுமே செலவாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தென்னை பயிர்ச் செய்கைக்கு பசளை பயன்படுத்தப்படாததால், தெங்கு உற்பத்தி குறைவடைந்துள்ளது. உர மாணியம் வழங்குவதன் மூலம் தெங்கு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக