7 நவம்பர், 2010

விமான தயாரிப்பில் இந்தியாவுடன் ரஷ்யா கைகோர்ப்பு






வளர்ந்த நாடுகளை மிஞ்சும் வகையில், விண்வெளித் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. ராக்கெட்டுகளை செலுத்துவதில் முன்னோடி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இருப்பினும், விமான தயாரிப்பில் நாடு இன்னும் பின்தங்கியே உள்ளது. கடந்த ஆண்டுகளில், பல்வேறு திட்டங்கள் துவக்கப்பட்டாலும் அவை முழுமையான பலனைத் தரவில்லை. இந்நிலையில், இந்தியாவிலேயே சிறந்த விமானங்களை தயாரிக்கும் திட்டத்திற்கு ரஷ்யா உதவ முன் வந்துள்ளது.

இது குறித்து, இந்தியாவும், ரஷ்யாவும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய பின், பல வழிகளில் விமான போக்குவரத்தை மேம்படுத்தி இயக்கத் தேவையான முயற்சிகளை செய்து வருகின்றன. இந்தியாவில் விமான போக்குவரத்து ஆண்டிற்கு 21 சதவீதம் அதிகரித்து வருகிறது. எனவே, புதிய விமானங்களின் தேவை அதிகமாகி உள்ளது. புதிய விமான உற்பத்தி குறித்து இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியாக, 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த இந்திய அரசும், ரஷ்ய அரசும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்படி, 15 முதல் 20 டன் குறைவான எடையுள்ள விமானங்களை இந்தியாவும், ரஷ்யாவும் பயன்படுத்தும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும், ரஷ்யா சார்பில் ரோசோபோரோ எக்ஸ்போர்ட் ஏஜன்சியும் கையொப்பமிட்டுள்ளன. விமான தயாரிப்பிற்கான பணிகள் பெங்களூரில் நடைபெறும். இங்கு 205 விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இவை, 800 கி.மீ., வேகத்தில் 12 ஆயிரம் மீட்டர் உயரத்தில், 2 ஆயிரத்து 700 கி.மீ., தூரம் பறக்க வல்லவை.

இந்த விமானங்கள் இரட்டை இன்ஜின் கொண்டவையாகவும், இன்ஜின் கட்டுப்பாடு முழுவதும் டிஜிட்டல் தொழில் நுட்பம் கூடியதாகவும் இருக்கும். விமானி அமரும் இடம் முற்றிலும் நவீன முறையில் கண்ணாடியால் அமைக்கப்பட்டிருக்கும். இந்தியாவில் உள்நாட்டு விமான உற்பத்தி அதிகரிக்கும் போது, சிறிய நகரங்களுக்கான உள்நாட்டு விமான போக்குவரத்து மேம்படும். மேலும், கடலோர பாதுகாப்பு, விமானப்படை போன்ற பாதுகாப்பு அமைப்புகள் கூடுதல் விமானங்களைப் பெற்று, சிறப்பாக பணிபுரிய வாய்ப்பு ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக