8 நவம்பர், 2010

வெலிக்கடை சிறையில் பொலிஸ் மீது கைதிகள் தாக்குதல் ஐம்பது பேர் காயம்; சோதனையிடச் சென்றபோது சம்பவம்



வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றுக் காலை திடீர் சோதனை மேற்கொள்ள சென்ற விசேட பொலிஸ் குழு மீது கைதிகள் நடத்திய தாக்குதலில் 45 பொலிஸாரும், 5 சிறைக் காவலர்களும் காயமடைந்துள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்க மறியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரிவில் சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஐம்பது பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவ தாவது, வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் பாவனை இடம் பெறுவதாகவும், கைதிகள் சிலர் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கிடைக்கப் பெற்ற தகவல் களை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்ற அனுமதியைப் பெற்று விசேட பொலிஸ் குழுவினர் திடீர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப் புடன் 66 பொலிஸார் அடங்கிய இந்த விசேட குழுவினர் தேடுதல் நடத்திக்கொண்டு இருக்கும் போது குறித்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகள் சிலர் பொலிஸார் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். அதனை அடுத்து ஏனைய கைதிகளும் கற்கள், போத்தல்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலை அடுத்து அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த மேலதிக பொலிஸாரும், சிறைக் காவலர்களும், முப்படையினரும் தாக்குதல்களுக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்துள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அங்கு விரைந்த விசேட படைப் பிரிவினர் காயமடைந்தவர்களை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளனர். இவர்களில் சிலர் அவசர சிகிச்சை பிரிவுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதிக்கப்பட்டவர்களில் அநேகமானவர்களின் தலை மற்றும் உடம்பிலேயே காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவென விசேட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் (சி. ஐ. டி.) குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அந்தக் குழு தமது விசாரணைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாலிஸார் மற்றும் சிறைக் காவலர் மீது தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கற்கள், போத்தல்கள் மற்றும் பொருட்கள் சிறைக் கூடங்களுக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பன தொடர்பாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது தொடர்பாகவும் சி. ஐ. டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து அங்கு விரைந்த பொலிஸ், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து சிறைச் சாலைக்குள் மீண்டும் ஒரு விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த மாதம் 18ம் திகதி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மஜீத் தலைமையில் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவை சுற்றிவளைத்து நடத்திய இது போன்ற திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது 53 கையடக்கத் தொலைபேசிகள், பற்றரிகள், சார்ஜர்கள் மற்றும் 44 கஞ்சா சுருட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக