8 நவம்பர், 2010

பெருந்தோட்ட மக்களுக்கு இந்திய உதவியுடன் 5000 வீடுகள்


மலையக பெருந்தோட்ட மக்களுக்கு மிக விரைவில் இந்திய அரசின் அனுசரணை யுடன் 5000 வீடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா நேற்று தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (7.11.2010) நடைபெற்ற பெருந் தோட்டத்துறை போக்குவரத் திற்காக 20 பஸ் வண்டிகளை இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு இந்திய தூதுவர் கையளிக்கும் வைபவத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.

கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்ட மான் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் இந்திய தூதுவர் தொடர்ந்து உரையாற்று கையில், 30 ஆண்டுகால யுத்தத்தினால் வட கிழக்கு மக்கள் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர். இவர்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல இலங்கை ஜனாதிபதி பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.

இதன் ஒரு கட்டமாக கடந்த ஜூன் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமருடன் நடாத்திய பேச்சு வார்த்தையின் பயனாக 50000 வீடுகளை இந்திய அரசு அமைத்துக் கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இதில் 5000 வீடுகளை பெருந்தோட்ட மக்களுக்கு அமைத்து கொடுக்கப்படவுள்ளது. அத்தோடு மிக விரையில் டிக்கோயா நகரில் 150 படுக்கை களை கொண்ட சகல வசதி களுடன் வைத்தியசாலை ஒன்றும் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளதோடு இதற்கான அடிக்கல்லை மூன்று வார

காலத்துக்குள் நாட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மாத்திரமின்றி இந்திய அரசின் அனுசரணையில் மலையக பெருந்தோட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசிலும் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் மலையக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுப்பதற்காக நுவரெலியா மாவட்டத்தில், இந்தியா தனியார் நிறுவகத்தின் ஒத்துழைப்புடன் தொழில் பயிற்சி நிலையம் ஒன்றும் வெகு விரையில் அமைக்கப்படவுள்ளது.

அதேவேளை மலையக மாணவர்கள் பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து நகர பாடசாலைகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் இன்றி பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாகவே கடந்த வருடமும் இவ் வருடமும் பஸ் வண்டிகளை கையளித்துள்ளோம். இங்கு பயிற்சிகளை வழங்குவதற்காக இந்தியாவில் இருந்து பயிற்றுனர்களும் அழைத்து வரப்பட்டவுள்ளனர். இந்த பயிற்சிகளை இங்குள்ளவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இவ் வைபவத்தில் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி இராஜதுரை ஆகியோரும் உரையாற்றினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக