31 அக்டோபர், 2010

கொரிய மொழி எழுத்துமூலப் பரீட்சை: மோசடியில் ஈடுபட முயன்ற சிலர் மண்டபத்திலிருந்து வெளியேற்றம்


தென் கொரியாவில் வேலைவாய்ப்புக்காக நடத்தப்படும் கொரிய மொழி எழுத்து மூல பரீட்சைக்குத் தோற்றியவர்களுள் மோசடி முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் பரீட்சை மண்டபத்துக்கு வெளியே பொலிஸாரினால் அப்புறப்படுத்தப்பட்டனர்.

கொழும்பில் 13 இடங்களில் 493 மண்டபங்களில் கொரிய மொழி எழுத்துப் பரீட்சைகள் நேற்று நடைபெற்றன. இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெறுகிறது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எட்டாவது தடவையாகவும் நடத்தும் இந்தப் பரீட்சைக்கு முதல் முறையாக 700 பொலிஸாரின் உதவி பெறப் பட்டுள்ளது. செலியூலர் தொலைபேசிகள் ஊடாக குறுந்தகவல்கள் அனுப்பி பரீட்சை எழுதுவதற்கு உதவி செய்வதாக சில குழுவினர் சிம்கார்ட்டுகளையும் சுமார் 25,000 ரூபா முதல் 40,000 ரூபா வரையில் விற்பனை செய்துள்ளனர். இதன் காரணமாக பரீட்சை மண்டபத்துக்குள் செலியூலர் தொலை பேசிகளைக் கொண்டு வரவேண்டாம் என ஏற்கனவே பணியகம் அறிவித்திருந்தது. இதனை முறியடிப் பதற்காகவே 700 பொலிஸாரின் உதவியும் பெறப்பட்டது.

சகல பரீட்சை நிலையங்களிலும் பொலிஸார் தீவிர சோதனையில் ஈடு பட்டதன் காரணமாக உள்ளாடைகளுக் குள்ளும், முதுகிலும், காலணிகளுக் குள்ளும் கையடக்கத் தொலைபேசிகள், காகிதத் துண்டுகள் மறைத்து வைத்து எடுத்து வந்தமையும் கண்டு பிடிக்கப்பட்டது. இவர்கள் பரீட்சை மண்டபத்தினுள் அனுமதிக்கப் படவில்லை. மிகவும் பாதுகாப்பாக பரீட்சை மண்டபத்தினுள் சகலரும் பரீட்சைக்குத் தோற்றும் விதத்தில் பரீட்சையை திறம்பட நடத்தியுள்ளதன் மூலம் தென் கொரியாவில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புகளை மேலும் அதிகரித்து வழங்கும் வாய்ப்பு இருக்கிறது என தென் கொரிய மனிதவள மேம்பாட்டுப் பிரிவு பணிப்பாளர் நாயகம் ஸ்டெஜுன்க் இல் சுங்க் தெரிவித்தார்.

குளறுபடிகள், மோசடிகள் இன்றி சகலரும் பங்குபற்றக் கூடிய விதத்தில் பரீட்சையை ஒழுங்கு செய்த பணியகத்துக்கும் தென் கொரிய தூதரகத்துக்கும், பரீட்சைத் திணைக்கள அதிகாரிகளுக்கும் விசேடமாக பொலிஸாருக்கும் பரீட்சார்த்திகள் நன்றிகளை தெரிவித்தனர்.

இன்றும் கொரிய மொழி எழுத்து மூலப் பரீட்சைகள் நடைபெறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக