8 அக்டோபர், 2010

பொன்சேகா கோரிக்கை வைத்தால் விடுவிக்க தயார்: ராஜபக்ஷே பேட்டி




"சரத் பொன்சேகாவை விடுவிக்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர். பொன்சேகாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ கோரிக்கை விடுத்தால் மட்டுமே இதுகுறித்து பரிசீலிக்கப்படும்' என, இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே, பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி:இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு, ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் முறைகேடு செய்த குற்றத்துக்காக 30 மாத சிறைத் தண்டனை விதித்து, ராணுவ கோர்ட் தீர்ப்பளித்தது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர். பொன்சேகாவோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவரோ, அரசுக்கு வேண்டுகோள் விடுத்தால் மட்டுமே இது குறித்து பரிசீலிக்கப்படும்.

இதில், விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படும்.கடந்த 1980ல் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் கணவர் விஜய குமாரதுங்கா, நக்சலைட் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, அவசர சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பின், அவரது மனைவி வேண்டுகோள் விடுத்ததால், அவர் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்.இவ்வாறு ராஜபக்ஷே கூறியுள்ளார்.ஆனால், பொன்சேகாவின் மனைவி அனோமா, தனது கணவரை விடுவிக்கக்கோரி, அதிபரிடம் வேண்டுகோள் வைக்க போவது இல்லை என, ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக