8 அக்டோபர், 2010

சர்வதேச மட்டத்தில் அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதே ஐ.தே.கவின் நோக்கம் நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தில் அமைச்சர் மைத்திரி




சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்தின் மீது சேறு பூசவதையும், அபகீர்த்தியை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுதான் வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக ஐ.தே.க.வினர் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டி ருக்கும் சகல குற்றச் சாட்டுக்களை யும் நாம் நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வினர் சபைக்குக் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை ஆளும் தரப்பில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் இலங்கை விவகாரம் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்கவென நிபுணர் குழுவை நியமிப்பதைத் தவிர்ப்பதற்கும், ஜி.எஸ். பி. பிளஸ் நிவாரணம் தொடர்ந்தும் கிடைப்பதற்கு வழி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தவறியுள்ளார்.

அதனால், அவர் அமைச்சராக தொடர்ந்து செயலாற்றுவதில் இச்சபை நம்பிக்கை இழந்துள்ளதெனக் குறிப்பிட்டு ஐ.தே.க. எம்.பிக்களான ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் கையெழுத்திட்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சபைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

இப்பிரேரணை மீதான விவாதத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் உரையாற்றுகையில், அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவி ஏற்று ஆறுமாதங்கள் கூட நிறைவுறவில்லை.

அதற்கிடையில் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வினர் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளனர். இது நாட்டின் மீதுள்ள பற்றினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை அல்ல. இது உள்நோக்கத்துடன் வெளிநாடுக்கு காண்பிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டிருக்கும் ஒரு பிரேரணையாகும்.

கல்வி அமைச்சருக்கு எதிராகவோ, சுகாதார அமைச்சருக்கு எதிராகவோ அல்லது வேறு அமைச்சர் ஒருவருக்கு எதிராகவோ நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்திருக்கலாம்.

அதனை அவர்கள் செய்யவில்லை. ஏனென்றால் வெளி விவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை என்றால் தான் சர்வதேச மட்டத்தில் அது பேசும் பொருளாக மாறும் அதன் மூலம் சர்வதேச மட்டத்தில் அற்ப இலாபம் பெற்றுக் கொள்ளலாம் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இது தூர நோக்கற்ற முறையில் கொண்டு வரப்பட்டிருக்கும் பிரேரணையாகும்.

இப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இப் பிரேரணை படுதோல்வி அடைவதுடன், தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும், அடைந்து கொள்ள, ஐ.தே.க. எதிர்பார்த்திருக்கும் எதிர்பார்ப்புகள் தவிடுபொடியாகிவிடும். ஐ.தே.க. மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். கட்சிக்குள் உருவாகியுள்ள நெருக்கடியைக் கூட தீர்த்துக் கொள்ள முடியாத நிலைக்கு ஐ.தே.க. தலைமைத்துவம் தள்ளப்பட்டிருக்கின்றது. ஐ.தே.க. வானது டி.எஸ்.

சேனநாயக்கா, டட்லி சேனாநாயக்கா போன்ற சிரேஷ்ட தலைவர்கள் தலைமை வகித்த கட்சி, அத்தலைவர்கள் தேசியத் துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டார்கள். அப்படியான நிலைமை இப்போது ஐ.தே.கவில் இல்லை.

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட போது பிரதான எதிர்க்கட்சியான ஐ.தேக. அதற்கு ஆதரவு நல்கவில்லை. யுத்தத்தில் நாம் வெற்றி அடைவோம் என முழு நாட்டு மக்களும் எதிர்பார்த்திருக்கையில், இவர்கள் நாம் யுத்தத்தில் தோல்வியுற்று நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ள வேண்டுமென விரும்பினர். அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. யுத்தம் முடிந்து நாட்டில் அமைதி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தேக.க. வினரும், புலி ஆதரவாளர்களும் வெளிநாடுகளுக்கு வழங்கிய பிழையான தகவல்கள் தான் ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கை விவகாரம் தொடர்பாக நிபுணர் குழுவை நியமிக்க வழி செய்தது என்றாலும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்ஸின் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளால் அந்த நிபுணர் குழுவே காணாமல் போயுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக