4 செப்டம்பர், 2010

அனைத்துப் பல்கலை. ஊழியர்களும் ராஜினாமா செய்யத் தீர்மானம் : பேரா. சம்பத்

பல்கலைக்கழகங்களில் தொண்டர் அடிப்படையில் சம்பளமின்றி சேவையாற்றும் ஊழியர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்வதற்குத் தீர்மானம் எடுத்துள்ளதாகப் பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனத் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்களும், தமது சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இவர்களது பிரச்சினைக்கான தீர்வு விரைவில் எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடைநிறுத்தப்பட்டது.

இது குறித்துப் பேராசிரியர் சம்பத் மேலும் தெரிவிக்கையில்,

“சம்பளமின்றி தொண்டர் அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களான பல்கலைக்கழக நிர்வாக குழுவினர், சுகாதார நிர்வாகத்தினர், பாதுகாவலர் மற்றும் ஆலோசனைக்குழு தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து ராஜினாமா கடிதங்களை எதிர்வரும் 6 ஆம் திகதி சேகரிக்கவுள்ளோம்.

ஆகவே அரசிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம்.

கடந்த புதன்கிழமை அனைத்து பல்கலைக்கழக ஊழியர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆர்ப்பாட்டம் இடைநிறுத்தப்பட்டது. நாம் சாதாரண தொழிற்சங்க உறுப்பினர்கள் போன்றவர்களல்லர்.

கல்வியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். அதனாலேயே எமது கோரிக்கைகளுக்குத் தீர்வைப் பெற்று தர நீண்டகால அவகாசத்தை அரசுக்கு வழங்கியுள்ளோம்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக