4 செப்டம்பர், 2010

அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஐ.தே.க எம்.பிக்கள் ஆதரவு


உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கப்போவதாக ஐ.தே.க. எம்.பி.களான லக்ஷ்மன் செனவிரத்ன, ஏர்ல் குணசேகர, மனுஷ நாணயக்கார ஆகியோர் நேற்று அறிவித்தனர்.

ஐ.தே.க.வின் பதுளை மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் செனவிரட்ன, பொலனறுவ மாவட்ட எம்.பி. ஏர்ல் குணசேகர, காலி மாவட்ட எம்.பி. மனுஷ நாணயக்கார ஆகியோரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐ.தே.கட்சியிலிருந்து மேலும் பலர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாகக் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றிருக்கும் நிலையில் கட்சி உறுப்பினர்கள் எடுத்திருக்கின்ற இந்த முடிவு கட்சித் தலைமையின் மீதுள்ள அதிருப்தியை வெளிக்காட்டுவதாகத் தெரிகிறது.

இதேவேளை மேலும் பல ஐ.தே.க. எம்.பிகள் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று தெரிவித்தார்.

எதிர்வரும் 8ம் திகதி நடைபெறும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூல வாக்கெடுப்பின் போது பல ஐ.தே.க. எம்.பிகள் ஆதரவாக வாக்களிப்பர் எனவும் அவர் கூறினார்.

மூன்று ஐ.தே.க. எம்.பிகள் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்க முன் வந்திருப்பது குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மூன்று ஐ.தே.க. எம்.பிகள் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்திருப்பதன் மூலம் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் 157ஆக அதிகரித்துள்ளது.

சபாநாயகர் தவிர்த்து ஆளும் தரப்பிற்கு 143 ஆசனங்கள் உள்ளன. ஐ.தே.க. எம்.பிகளான பி.திகாம்பரம், பிரபா கணேசன் ஆகியோர் அரசாங்கத்தில் இணைந்துள்ளதோடு ஏ.ஆர்.எம்.ஏ. காதர் எம்.பி. அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறார். அதேநேரம் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்க 8 முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிகள் முன்வந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் கருத்துக் கூறிய அமைச்சர் தினேஷ் குணவர்தன நாளுக்கு நாள் அரசிற்கான ஐ.தே.க. எம்.பிகளின் ஆதரவு அதிகரித்து வருகிறது. பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை விட கூடுதலாக ஆதரவு கிடைத்துள்ளது என்றார்.

யாப்புத் திருத்தத்திற்கு எதிராக ஜே.வி.பி. துண்டுப் பிரசுரம் விநியோகித்து எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், இதனை எதிர்க்க அவர்களுக்கு ஜனநாயக ரீதியான உரிமை உள்ளது.

ஆனால், அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது. அதற்குத்தக்க பதில் வழங்கப்பட்டுள்ளது என்றார். ஏர்ல் குணசேகர எம்.பி.யின் வீட்டில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஐ.தே.க. பிரதிச் செயலாளர் லக்ஷ்மன் செனவிரத்ன கூறியதாவது, யாப்புத் திருத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஐ.தே.க. எம்.பிகளுடன் பேசி இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த முயற்சி செய்வோம். இதற்கு எதிராக வாக்களிக்க ஐ.தே.க. முடிவு செய்தால் எமது முடிவை 8ம் திகதி வெளியிடுவோம். யாப்புத் திருத் தத்திற்கு ஆதரவு வழங்குவதால் ஐ.தே.க.வுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது.

சிரேஷ்ட ஐ.தே.க. எம்.பி ஏர்ல் குணசேகர கூறியதாவது, அரசாங்கத்துடன் இணைய உள்ளோமா இல்லையா என்பது தற்பொழுது பிரச்சினையல்ல. மனச்சாட்சிக்கு விரோதமாக எமக்கு முடிவு எடுக்க முடியாது. அதனால், நாம் இந்த யாப்புத் திருத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளோம்.

இது குறித்து பேசுவதற்கு ஐ.தே.க. தலைவரிடம் நேரம் ஒதுக்கித்தரக் கேட்டேன். ஆனால், தான் இந்தியாவுக்கு செல்ல உள்ளதாகவும் திங்கட்கிழமை நாடு திரும்பியதும் நேரம் ஒதுக்குவதாக கூறினார்.

தனித்தனியாக இதற்கு ஆதரவு வழங்காது கட்சி என்ற ரீதியில் ஆதரவு அளிக்கவே முயற்சி செய்கிறோம்.

அண்மையில் நடந்த ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தின் போது யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என லக்ஷ்மன் செனவிரத்னவும் வஜிர அபேவர்தனவும் பிரேரித்தனர். ஆனால் நாம் ஐ.தே.க. வை பின்பற்றத் தேவையில்லை.

கடந்த காலத்தில் ஐ.தே.க. தலைவர் பல தவறான முடிவுகளை எடுத்தார். யுத்தத்தின் போது அரசுக்கு ஆதரவளிக்காமை போன்ற காரணங்களினாலே கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக