21 செப்டம்பர், 2010

வடமாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு

வட மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசதரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிகின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதம் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை உள்ளூராட்சிமன்ற தேர்தல் அடுத்தவருடம் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளதாகவும் அதனுடன் இணைந்த வகையில் வடக்கு மாகாண சபை தேர்தலும் நடத்தப்படலாம் என்று கூறப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் மாகாண சபையின் பங்களிப்பையும் உள்வாங்கும் நோக்கிலேயே வடக்குத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.

இதேவேளை எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அல்லது பெப்ரவரி மாதத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.

தற்போதைய நிலைமையில் உள்ளூராட்சிமன்ற சட்டமூலத்தின் திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. விரைவில் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

கடந்த முறைமைகளை போலன்றி இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தல் பாரியளவில் முக்கியத்துவம் பெறுகின்றது. காரணம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து பிரதேசங்களிலும் இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறப்போகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக