21 செப்டம்பர், 2010

முகாம்களிலுள்ள இளைஞர், யுவதிகள் விவகாரம்; பயங்கரவாத தடுப்பு பிரிவினருடன் ஆணைக்குழு தலைவர் 17இல் சந்திப்பு

ஆணைக்குழுவினர் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்று நிலைமை ஆராய்வு
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகள் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகளை (ரிஐடி) எதிர்வரும் வெள்ளிக்கிழமை அழைத்துப் பேசவிருப்பதாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி. சில்வா நேற்று தினகரனுக்கு முள்ளிவாய்க்காலில் வைத்து தெரிவித்தார்.

இந்த இளைஞர், யுவதிகள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதற்கான காரணங்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டறிய விருப்பதாகவும் அவர் கூறினார்.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர், யுவதிகள் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் அளிக்கும் விளக்கத்திற்கு ஏற்ப தாம் அவர்களுக்கு சில சிபாரிசுகளை முன்வைக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர், யுவதிகளை விடுவித்து அவர்கள் தங்களது குடும்ப உறவினர்களுடன் மீண்டும் குடும்ப வாழ்வில் ஈடுபடுவதற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் அமர்வு முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நேற்றுக் காலையில் நடைபெற்றது. இந்த அமர்வில் சாட்சியமளிக்க வென சுமார் நூறு பேரளவில் வந்திரு ந்தனர்.

இந்த அமர்வைத் தொடர்ந்து ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வாவும், ஆணைக்குழு உறுப்பினர்களும் இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களை நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மக்கள் சிக்குண்டிருந்த பிரதேசத்தையும் பிரபாகரனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நந்திக்கடல் களப்பையும், பிரபாகரனின் நிலக் கீழ் மாளிகை, நீச்சல் தடாகம் என்பவற்றையும் இவர்கள் பார்வையிட்டனர்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆயிரக் கணக்கான வாகனங்கள் எரிந்து அழிந்த நிலையில் காணப்படுகின்றன. இதனைப் பார்த்து ஆணைக்குழுவின் தலைவர் அதிர்ச்சி அடைந்தார். “ஏன் இவற்றை அழித்தார்கள் என்பதை நானறியேன்.

இந்தச் சொத்துக்களுக்குரிய உரிமை யாளர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவது அவசியம்” என்றும் அவர் தினகரனுக்குக் கூறினார்.

இக்குழுவினர் புலிகளால் கைப்பற் றப்பட்ட ஜோர்தான் நாட்டு பரா-3 என்ற கப்பலையும் பார்வையிட்டனர். அத்தோடு முள்ளிவாய்க்கால் பகுதியில் எரிந்து அழிந்துள்ள மிதவையையும், படகுகளையும் இவர்கள் பார்த்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக