4 மே, 2010

பொருளாதார அபிவிருத்திக்கும் சமூக மேம்பாட்டுக்கும் பேதங்களை மறந்து சகலரும் ஒத்துழைக்க வேண்டும்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கும் பொருளாதார அபிவிருத்தி சமூக மேம்பாடு என்பவற்றை அடுத்துவரும் மூன்று வருடங்களுக்குள் ஏற்படுத்த முடியும் என்று பிரதமரும், புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சருமான தி. மு. ஜயரத்ன தெரிவித்தார்.

நாட்டினதும், மக்களினதும் நலனை கருதி பொருளாதார அபிவிருத்தி, சமூக மேம்பாட்டுக்காக சகலரும் கட்சி அரசியல், பேதங்களுக்கு அப்பால் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பு – 7, விஜேராமவில் உள்ள புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சுக்கு வருகை தந்த பிரதமர் தி. மு. ஜயரத்ன தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு கடமைகளை நேற்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் :

சமுதாயத்தை மாற்றியமைக்கும் பாரிய பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்கு உள்ளது.

எமது நாட்டில் வாழும் அதிகமான மக்கள் நல்லவர்களாக இருக்கின்றனர். இருப்பினும் ஒருசிலர் செய்யும் மோசமான செயல்கள் காரணமாக சகலரது பெயரும் கெட்டுப் போகின்றது. நாட்டில் தற்பொழுது பல்வேறு வகையான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றை சட்டங்களின் மூலம் முற்றாக இல்லாமல் செய்ய முடியாது.

ஆனால் மதங்களின் ஊடாக அதனை மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

பெளத்த, ஹிந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களின் தலைவர்களின் ஒத்துழைப்புடன் எமது நாட்டில் சிறந்ததொரு சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும்.

இதற்கு சகலரினதும் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், அஷ்ஷெய்க் எம். ஐ. அமீர், இந்து சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை. எல். எம். நவவி, இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் நியாஸ் மெளலவி, உட்பட முக்கியஸ்தர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக