புதுடில்லி: இந்தியாவிற்குள் மேற்கு கடல் பகுதி வழியாக 140 அல்குவைதா மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்திருப்பதாக உளவு துறையை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநிலம் வாரியாக பிரிந்து சென்று சதித்செயலில் ஈடுபடக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பல மாநிலங்களுக்கு குழுவாக பிரிந்து சென்றனர் : அசாம் மாநில போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி 140 பேர் இந்தியாவின் மேற்கு பகுதி கடல் வழியாக வந்திருக்கின்றனர் என்றும் , மகாராஷ்டிரா, குஜராத்தில் இறங்கி அங்கிருந்து பல குழுக்ககளாக அதாவது 30 பேர் ராஜாஸ்தானுக்கும், உ . பி., க்கு 14 பேரும் , 15 முதல் 20 பேர் ஆந்திர மாநிலம் ஐதராபாத்திற்கும், மகாராஷ்டிராவுக்கு 12 பேரும், டில்லி - அரியானாவுக்கு 5 பேரும், இதில் இருந்த ஏனைய 40 பேர் தென் மாநிலங்களுக்கும் பிரிந்து சென்றிருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகள் இலங்கை மீனவ படகு மூலம் வந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் நேபாளத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு தொடர்பு கொண்ட பயங்கரவாதிகளின் உரையாடல் மூலம் தெரிய வந்திருப்பதாகவும் தெரியவருகிறது.
அமெரிக்க எச்சரிக்கைக்கு காரணம் : இந்த உறுதிப்படுத்தப்படாத சந்தேக தகவல்கள் மூலம் தான் கடந்த 2 வாரங்களாக நாடு முழுவதும் உஷாராக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது என்றும், இதனை கருத்தில் கொண்டுதான் அமெரிக்காவும் 2 முறை எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 20 நாட்களாக டில்லியில் கூடுதல் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதற்கும், இது தான் காரணம் என பாதுகாப்பு வட்டாரம் தெரிவிக்கிறது. கடல் வழி பாதுகாப்பு போதிய அளவில் இல்லை என்ற பாதுகாப்பு துறை வட்டாரமே ஒத்துக்கொண்டுள்ளது என்பது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மும்பைக்கு கடல் வழியாகத்தான் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் ஆயுதங்களுடன் ஒருவன் கைது : இந்த தகவலையடுத்து ஆந்திராவில் கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஐதராபாத் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பவானிநகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி பயங்கரவாதி ஒருவன் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளான். எடிபஜார் பகுதியை சேர்ந்த முகம்மது ஜியா உல் ஹக் என்பவனிடமிருந்து வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.ஐதராபாத் நகரில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய திட்ட மிட்டிருந்ததும், பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சிகளையும் பெற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக