12 மே, 2010

களனி விஹாரையில் கடத்தப்பட்ட குழந்தை மாரவிலயில் மீட்பு பின்னணியை கண்டறிய பொலிஸ் தீவிர விசாரணை


களனி விஹாரையில் ஞாயிறன்று வயதான பெண்மணியால் கடத்தப்பட்ட 2 1/2 வயது குழந்தை மாரவில பகுதியில் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மிக பொறு ப்பாக செயற்பட்டதன் காரணமாகவும் பொலிஸாரின் தீவிர முயற்சியின் பயனாகவும் 48 மணி நேரத்துள் குழந்தையை மீட்க முடிந்தது என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்று தெரிவித்தார்.

2 1/2 வயது செனுரி லிமன்சா மாபலகம என்ற குழந்தையும் அவரது பெற்றோரும் நேற்று பொலிஸ் தலைமையகத்துக்கு வரவழைக்கப்பட்டதுடன் ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டனர்.

குழந்தையை கடத்திச் சென்ற பெண் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மாரவில, மற்றும் கல்கிஸை பகுதி தொலைபேசி இலக்கங்கள் தொடர்பாகவும் கடத்தியதன் நோக்கம் தொடர்பாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

கடந்த ஞாயிறன்று களனி விஹாரையில் போதி பூஜைக்காக சென்றபோது குழந்தையை கடத்திச் சென்ற பெண், குழந்தையை விற்பதற்காக சென்றாரா அல்லது எவருடையதாவது தூண்டுதலின் பேரில் செய்தாரா என்பது பற்றி தீவிர விசாரணைகள் செய்யப்படுகின்றன.

தன்னுடன் விஹாரையில் போயா தின சில் அனுஷ்டானத்தில் ஈடுபடும் மற்றுமொரு பெண்ணின் வீட்டிலேயே ஞாயிறு இரவு குழந்தையுடன் தங்கியுள்ளார்.

மறுநாள் காலை களனி பட்டிய ஹந்திய எனும் இடத்திலுள்ள தொலைத்தொடர்பு நிலையமொன்றில் இரண்டு தொலைபேசி அழைப்புகளை எடுத்துள்ளார். இத்தொலைபேசி இலக்கங்களையும் பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

மாரவில பகுதி வீடொன்றுக்குச் சென்ற பெண் குழந்தைக்கு ஒரு சோடி செருப்பு வேண்டும் என கேட்டுள்ளார். அந்த வீட்டிலிருந்த இளைஞனுக்கு பெண் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதுடன் குழந்தை யார்? உங்களுக்கு எவ்வாறு கிடைத்தது எனக் கேட்டுள்ளார். எனக்கு தெரிந்த ஒருவர் குழந்தையை தந்தார் எனக் பெண் கூறியதும் சந்தேகம் வந்தவுடன் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியான குழந்தைதான் இது என ஊர்ஜிதம் செய்த பின் முச்சக்கர வண்டியொன்றின் மூலம் பெண்ணையும் குழந்தையையும் மாரவில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

மிகவும் பொறுப்புடன் செயற்பட்ட மேற்படி இளைஞனை பாராட்டியதுடன் பொலிஸ் திணைக்களம் அறிவித்த பரிசுத் தொகையையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

கடந்தப்பட்ட குழந்தையின் பாட்டனார் நோய்வாய்ப்பட்டிருந்ததன் காரணமாகவே போதி பூஜை செய்வதற்கு களனி விஹாரைக்கு சென்றுள்ளனர். குழந்தை கடத்தப்பட்ட விடயம் கேள்வியுற்ற பாட்டனர் மரணமாகியதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

தங்களது மகளை மீட்பதற்காக பூரண ஒத்துழைப்பை வழங்கிய ஊடகங்களுக்கும், குழந்தையை மீட்க உடனடியாக செயற்பட்ட மாரவில இளைஞருக்கும் பொலிஸாருக்கும் பெற்றோர் நன்றிகளை பொலிஸ் தலைமையகத்தில் வைத்து தெரிவித்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக