12 மே, 2010

மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்க துறைசார்ந்தோர் பாடுபட வேண்டும்


ஜனாதிபதி



சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு துறை சார்ந்த சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை வெற்றி கொண்டது போல் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதிலும் நாம் வெற்றிகாண வேண்டியுள்ளது. எல்லாத் துறைகளிலும் பிரச்சினைகள் உள்ளன. பேச்சுவார்த்தை மூலம் அவற்றைத் தீர்க்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடு ஐக்கியப்படுத்தப்பட்டு எதிர்வரும் 19ம் திகதியோடு ஒரு வருடமாகிறது என்பதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அதற்காக பாடுபட்ட படையினரை நன்றியோடு நினைவு கூருவதோடு, இது வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான யுத்தமேயன்றி தமிழ் அல்லது முஸ்லிம் மக்களுக்கு எதிரான யுத்தமல்ல எனவும் குறிப்பிட்டார்.

சர்வதேச தாதியர் தின நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலுமிருந்து தாதியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, பந்துல குணவர்தன, ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் மஹிந்த அமரவீர உட்பட சுகாதாரத் துறை முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

தாதி என்பது ஒரு தொழில் மட்டுமல்ல. அது ஒரு உன்னதமான சேவையாகும். நாட்டைப் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படை வீரர்களைப் போலவே தாதியரும் இரவு - பகல் என பாராது தமது சேவையை வழங்கினர்.

இதனால் அந்த வெற்றியில் இவர்களும் பங்காளியாகின்றனர்.

30 வருடத்திற்குப் பின்பு எம்மால் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க முடிந்துள்ளது. தனி மனித வருமானத்தை 4000 ரூபாவாக அதிகரிப்பதே எமது நோக்கம் அதற்கு ஆரோக்கியமான மனிதர்கள் அவசியம்.

இன்றைய அவசர யுகத்தில் ‘பாஸ்ட் பூட்’ “பிஹஙூசி பிச்ச்னீ”கலாசாரம் மேலோங்கி நிற்கிறது. இதனால் ஆரோக்கியமென்பது கேள்விக்குறியாகியுள்ளது. நமது இளைய பரம்பரையினர் பல்வேறு நோய்களுக்குள்ளாகுவதற்கு இதுவே காரணமாகிறது.

எவ்வாறாயினும் இறுதியில் இத்தகைய சுமைகளையும் அரசாங்கமே சுமக்க வேண்டியுள்ளது.

கொழும்பு நகருக்கு வருபவர்களையும் அந்தந்த கிராமங்களில் வைத்தே முழுமையான சுகாதார சேவையை வழங்குவதற்கு இயலுமாக இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் ஆரோக்கியமான மனிதர்கள் உருவாக வேண்டும்.

நாட்டின் சுகாதாரத்துறை மேம்பாடடைந்துள்ளன. நவீன உபகரணங்களுடன் உலகில் சிறந்த சுகாதார பிரிவுகளும் எம்மிடமுண்டு.

மருத்துவத் தாதி சேவையைப் பொறுத்த வரை அதற்கென சமூகத்தில் ஒரு கெளரவமுண்டு. அதேவேளை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இத்தொழிலுக்கு அதிக கிராக்கி உள்ளது. அவ்வாறு வெளிநாடுகளுக்கு அவர்களை அனுப்பி அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்வதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக