29 ஏப்ரல், 2010

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அதிகளவு கைத்தொழில் பேட்டைகளை நிறுவ திட்டம்




றிஷாட் தகவல்; ஹோமாகம பேட்டைக்கு நேற்று விஜயம்
வடக்கு, கிழக்கில் அதிகளவு கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு திட்டமிட்டிருப்பதாக கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதற்காக வெளிநாட்டு முதலீ ட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு விரைவில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

கைத்தொழில் துறையை மேம்படுத்துவதன் மூலம் அதிகளவிலான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியுமென்றும், வேலையற்ற பட்டதாரிகளை இதற்குள் ஈடுபடுத்த முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து முதலீடுகளைச் செய்து, அதன் மூலம் உற்பத்தியாகும் கைத்தொழில் பொருட்களை அம்முதலீட்டாளர்களின் நாடுகளிலேயே சந்தைப்படுத்துவதே எனது இலக்கு.

இதன் மூலம் அதிகளவு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்ள முடிவதுடன், உற்பத்தியாளர்களுக்கு அதிகளவு வருமானத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியுமென்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அமைச்சர் றிஷாத் பதியுதீன் முதற் தடவையாக அமைச்சின் கீழுள்ள ஹோமாகம பனாகொடை கைத்தொழில் பேட்டைக்கு நேற்று விஜயம் செய்து அதன் செயற்பாடுகளை பார்வையிட்டார்.

கைத்தொழில் பேட்டை முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்சாலையில் கடமையாற்றும் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்த அமைச்சர் அதற்கான பணிப்புரைகளையும் விடுத்தார்.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், கைத்தொழிற் துறையை பொருளாதாரத்தை இலங்கைக்கு ஈட்டித் தரும் துறையாக மாற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணத்தை நனவாக்குவதற்கு அதிகாரிகளும் ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உலகின் முன்னணி நாடுகளுடன் இலங்கையும் போட்டியிட்டு வெற்றி கொள்ளும் அளவுக்கு இந்நாட்டை மாற்றியமைப்பதற்கும் எதிர்காலத்தில் சிறந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக