29 ஏப்ரல், 2010


எனது சொந்த தேவைக்கு பிரதமர் பதவியை பயன்படுத்த மாட்டேன்

கடமைகளை பொறுப்பேற்று பிரதமர் தி. மு. உரை


நாட்டுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களின் போது சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார்.

நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளும் நாட்டின் நலன், பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு செயற்பட்டால் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் உலகின் சிறந்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று தமது பொறுப்புகளை பிரதமர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கையேற்றார். இந்நிகழ்வு நேற்றுக் காலை கொழும்பு பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சர்வ மதத் தலைவர்களின் ஆசியுடன் நேற்றுக் காலை 7.30 மணி சுபவேளையில் பிரதமர் தமது பொறுப்புக்களைக் கையேற்றதுடன், அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பிரிதியமைச்சர் துமிந்த திசாநாயக்க, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் டி. எம். ஜயரத்ன இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அரசியலில் 60 வருட கால மக்கள் சேவையின் பின்னர் நாட்டின் பிரதமர் என்ற உன்னதமான பதவி எனக்குக் கிடைத்துள்ளது. இது எனது மக்களுக்குக் கிடைத்த மாபெரும் கெளரவமென நான் கருதுகிறேன். இப்பதவியினூடாக நான் எனது மக்களுக்கு சேவை செய்வதில் பின்நிற்க மாட்டேன். ஒருபோதும் எனது சொந்தத் தேவைகளுக்கு இப்பதவியைப் பயன்படுத்த மாட்டேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

நாட்டு மக்களுக்கான சேவையின் போது நான் பல தடைகளையும் அசெளகரியங்களையும் சந்திக்க நேர்ந்தது. அப்போதெல்லாம் எனது மக்கள் என்னுடனிருந்தனர். அதனால் எனது சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமையுடையவர்கள் அவர்கள்.

பயம் சந்தேகமின்றி சகல இன, மத மக்களும் சமத்துவமாக வாழும் இலங்கையைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அவருடன் இணைந்து செயற்படுவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக