29 ஏப்ரல், 2010

துப்பாக்கிச் சவால் இன்றித் திறந்த கலந்துரையாடல் : திம்பு மாநாட்டில் ஜனாதிபதி



இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15 ஆவது சார்க் மாநாட்டுக்காக கொழும்பில் நாங்கள் சந்தித்த போது, முப்பது வருடங்களாக நிலவிய மிகக் கொடூரமான பயங்கரவாத சவாலுக்கு இலங்கை முகம் கொடுத்துக் கொண்டிருந்தது. தற்போது பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதத்தை அழித்தொழித்த எமக்கு, துப்பாக்கியின் சவால் இல்லாமல் வெளிப்படையாகக் கலந்துரையாடி ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடிந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான சார்க் உடன்பாட்டின் உறுப்புரையினை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், நாம் இனங்கண்ட கண்காணிப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பூட்டான் தலைநகரான திம்புவில் நேற்று ஆரம்பமான சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது :

"அழகான திம்பு நகரத்தில் உங்களுடன் கைகோர்த்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

பிரதமர் நின்லே அவர்களே! சார்க் அமைப்பின் வெள்ளிவிழாக் காணும் வருடத்தில் நீங்கள் அதன் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் அமைப்பின் தலைவராக இருக்கின்ற காலத்தில் முழுமையான ஆதரவை வழங்குவேன் என நான் சத்தியம் செய்துகொள்கின்றேன்.

சகலரினதும் ஆதரவு தேவை

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில், கூடுதலான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொடுத்த எனது நாட்டின் மக்களுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் நல்ல எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக இலங்கைக்கு அருகில் இருக்கின்ற உங்கள் சகலரினதும் ஆதரவைக் கோரி நிற்கின்றேன். அந்த ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கின்றேன்.

1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் படிப்படியாக வளர்ச்சியடைந்த இந்தப் பயணத்தில் வெள்ளிவிழா கண்டுகொண்டிருப்பதை முன்னிட்டு நாம் பெருமிதம் கொள்ளவேண்டும். எதிர்காலச் சந்ததியினருக்காக நாம் கைகோர்த்துக்கொண்டு, எமது பயணத்தைத் தொடரவேண்டும். அது பயனளிப்பதாக அமையும்.

சார்க் மாநாடு இம்முறை 'சுற்றாடலும் தெற்காசியாவும்' எனும் தொனிப்பொருளில் நடைபெறுகிறது. குளிர்மை மற்றும் தட்பவெப்ப நிலைமை தொடர்பில் ஆராயவேண்டியது தெற்காசிய வலய நாடுகளுக்குப் பொருத்தமானதாகவே இருக்கின்றது. இது தொடர்பில் வலயத்தின் குரல் சர்வதேச மேடைகளில் பலமாக ஒலிப்பதற்கு எங்கள் அனைவருக்கும் பொதுவான பொறுப்பு இருக்கின்றது.

தனி நபர் வருமானம் அதிகரிப்பு

ஜனநாயக நிர்வாகத்திற்காக முழுமையான அர்ப்பணிப்பு எமது முழு வலயத்திற்கும் பொதுவானதாகும். இந்தியாவின் முழுமையான அபிவிருத்தியுடன் இணைந்த எமது பொருளாதாரம் உலகப் பொருளாதார வீழ்ச்சியின் போது சரியான முறையில் முகம்கொடுக்க முடிந்துள்ளது. உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அழுத்தம் இருந்த போதிலும், இலங்கையில் எங்களுக்கு 6 வீத வளர்ச்சி வேகத்தில் கொண்டுசெல்வதற்கு முடிந்துள்ளது. அதனால், ஐந்து வருடங்களுக்கு முன்னர் 1,060 டொலராக இருக்கந் தனிநபர் வருமானம் இன்று 2,050 டொலர் வரை சென்றுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக முழுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட காலத்தில் கூட அபிவிருத்தி தொடர்பில் எம்மிடமிருந்த கவனத்தை நாம் குறைத்துக் கொள்ளவில்லை.

அரசியல் மறுசீரமைப்பிற்காக எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் மூலம், பொருளாதாரம் மற்றும் அரசியலுக்கு இடையில் தொடர்பு இருப்பதாக நாம் நம்புகின்றோம்.

சார்க் தலைமை வகித்த கடந்த 18 மாதங்களில் மிக முக்கியமான பிரிவுகளில் வலயத்தில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கை எடுத்தோம். மின்சக்தி, உயர்கல்வி, மாணவர்களின் போக்குவரத்து, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம், அது மட்டுமன்றி பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பிலான அமைச்சர்களின் ஆறு கூட்டங்கள் எமது நாட்டில் நடைபெற்றுள்ளன.

இலங்கையின் நடவடிக்கை

உலகப் பொருளாதாரம் தொடர்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சர்கள் இணைந்து வலய மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. இலங்கை எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும். அதனை நடைமுறைப்படுத்த அரச மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சார்க் நாடுகளின் ஆகக் கூடுதலான பெறுபேற்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக இன்னும் உழைக்கவேண்டியிருக்கின்றது. கிராமிய அபிவிருத்தி, மின்சக்தி, உணவுப் பாதுகாப்பு மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

0 சர்வதேச ரீதியில் எமது வலயத்தில் பொது மேம்பாட்டிற்காக ஒருமித்த குரல் கொடுப்பதற்கும் நல்ல முடிவுகளை எடுப்பதற்கும் பொருத்தமான வலயம் என்ற நிலைமையினையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த மாநாட்டில் கைச்சாத்திடப்பட்ட வர்த்தக மற்றும் சேவை, சுற்றாடல் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் இலங்கையில் உடனடியாகவே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சார்க் நாடுகளின் இனங்களுக்கிடையில் தொடர்புகளை மேம்படுத்தல் மட்டுமன்றி, மக்களின் போக்குவரத்திற்கு நேரடித் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன், பயங்கரவாதத்திற்கு எதிரான சார்க் உடன்பாட்டின் உறுப்புரயினை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், நாம் இனங்கண்ட கண்காணிப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்."

இவ்வாறு ஜனாதிபதி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக