29 ஏப்ரல், 2010

சரத்துக்கு வழங்கப்பட்ட காணிக்குச் செல்ல அனோமாவுக்கு அனுமதி மறுப்பு : விஜித ஹேரத்

நகர அபிவிருத்தி அதிகார சபை, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கியிருந்த காணிக்குச் செல்வதற்கு அவரது மனைவி அனோமாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

யுத்த வெற்றியின் பின்னர், நாட்டுக்காக ஆற்றிய சேவையினைப் பாராட்டி, முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு கொழும்பு நாரஹென்பிட்டியில் காணி வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பான சகல ஆவணங்கள் இருந்தும், அங்கு செல்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவில்லை என ஜனநாயக தேசிய முன்னணி தெரிவித்தது.

கொழும்பு 7 இல் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இத்தகவலைத் தெரிவித்தார்.

"இது போன்ற காணிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மட்டுமல்லாது ஏனைய முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தன. திருமதி பொன்சேகா அங்கு சென்ற வேளை, அவ்விடத்தில் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட்டிருந்தது.

அங்கு செல்ல யாருக்கும் அனுமதி அளிக்க வேண்டாம் எனத் தமது உயர்பீடம் அறிவுறுத்தியுள்ளதாக அங்கிருந்த பொலிஸார் கூறியுள்ளனர்.

நகர அபிவிருத்தி அதிகார சபை, பாதுகாப்பு அமைச்சின் கீழ் வந்துவிட்டதோ என சந்தேகமாக இருக்கிறது. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு மறைமுகமான தண்டனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பது புலனாகிறது" என அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக