29 ஏப்ரல், 2010

மேலவையில் தமிழர் பிரதிநிதித்துவம்” இலங்கை அதிபர் மஹிந்தவும் இந்திய பிரதமர் மன்மோகனும்




இலங்கை நாடாளுமன்றத்திற்கு மேலவையை உருவாக்கி அதில் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்போவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்திருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூடான் தலைநகர் திம்புவில் நடைபெறும் சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டை ஒட்டி அங்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும் இன்று சந்தி்த்துப் பேசினார்கள்.

சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது, 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்துவதில் தனது அரசு தீவிரமாக இருப்பதாகவும், தமிழர்களுக்கு நாடாளுமன்ற மேலவையில் மேலும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என்றும் மன்மோகன் சிங்கிடம் ராஜபக்ஷ அவர்கள் எடுத்துரைத்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிடமும் தமிழர்களின் தலைமையிடமும் தனது அரசு நேசக்கரம் நீட்டும் என்று ராஜபக்ஷ அவர்கள் கூறியதாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியா வருவதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா பாகிஸ்தான் மீண்டும் பேச்சுவார்த்தை

இதற்கிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியுறவு அமைச்சர்கள் நிலையில் மீண்டும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைத் துவக்க முடிவு செய்துள்ளன.

பூடான் தலைநகர் திம்புவில் நடைபெறும் சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டை ஒட்டி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் பிரதமர் யூஸுப் ராஸா கிலானியும் இன்று சந்தி்த்துப் பேசினார்கள். அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை ஏற்படுத்த பேச்சுவார்த்தைக்கான வழிகளைத் திறந்து வைப்பது அவசியம் என்று இரு நாட்டுத் தலைவர்களும் முடிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷர்மல் ஷெக்கில் நடந்த சந்தி்ப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் மீண்டும் இன்று சந்தித்துள்ளனர்.

இரு நாட்டுத் தலைவர்களும், தங்களது வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலில் சந்தித்தனர். பின்னர் இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.

அந்தச் சந்திப்பு வெளிப்படையாகவும் திறந்த மனதுடனும் இருந்ததாக இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக