4 மார்ச், 2010

பிரிட்டனின் செயற்பாடு இலங்கையின் இறைமை, ஒருமைப்பாட்டுக்குஅச்சுறுத்தல்
உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றச்சாட்டு; பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சரின் செயற்பாடுக்கு கண்டனம்
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட பிரிட்டனுக்கோ அல்லது வெறெந்த நாட்டுக்கோ தார்மீக உரிமை கிடையாது. புலிகளுக்குச் சார்பான உலகத் தமிழர் பேரவை கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றியதன் மூலம் அந்த அமைப்பின் செயற்பாடுகளுக்கு பிரிட்டன் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும். பிரிட்டனின் செயற்பாட்டின் மூலம் இலங்கையின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்ச ருமான ஜீ. எல். பீரிஸ் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (4) தகவல் ஊடக அமைச்சில் நடைபெற்றது.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

இலங்கைக்கு வெளியில் புலிகள் இயக்கத்தை நிறுவ வேண்டுமென்று கூறிவரும் உலகத் தமிழ் பேரவை கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் பங்கேற்றது மிகவும் தவறாகும். பிரிட்டனில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க அந்நாட்டு அமைச்சருக்கு உரிமை உள்ளது. ஆனால், இலங்கையின் உள்விவகாரம் குறித்து பேசுவதற்கு அவருக்கு எதுவித உரிமையும் கிடையாது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மக்கள் தெளிவான தீர்வு வழங்கியுள்ளனர். இந்த நாட்டுக்கு எத்தகைய தீர்வு தேவை என்பதை இந்த நாட்டு மக்கள் முடிவு செய்வர். ஒரு நாட்டின் விடயம் தொடர்பில் ஒவ்வொரு நாட்டுக்கும் தனிப்பட்ட நோக்கம் இருக்கலாம். ஆனால், அந்த நாட்டு உள் விவகாரங்களில் தலையிட அனுமதிக்க முடியாது.

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சரின் செயற்பாட்டையும் உரையையும் நாம் கண்டிக்கிறோம்.

இதேவேளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை ஆடைகளை கொள்வனவு செய்யாது பகிஷ்கரிக்குமாறு மேற்படி அமைப்பு அங்குள்ள தமிழ் மக்களை கேட்டுள்ளது.

இதனூடாக எமது நாட்டு பொருளாதாரத்தை அழிக்க சதி செய்யப்பட்டு வருகிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக