இலங்கையைப் பிரிக்க மேற்குலக நாடுகள் முயற்சி : அரசாங்கம் வீரகேசரிநாளேடு
பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கையில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அந்த நாடுகளுக்கு தேவையான பொம்மை அரசாங்கம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு முயற்சிக்கின்றன. எமது நாட்டின் பூகோள ரீதியான அமைவிடத்தின் முக்கியத்துவம் காரணமாகவே இவ்வாறான முயற்சியில் ஈடுபடுகின்றன என்று" ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
1948 ஆம் ஆண்டு எமது நாட்டிலிருந்து பிரிட்டன் சென்றது. எனினும் இன்னும் பிரிட்டிஷார் எமது நாட்டின் மீது ஒரு கண் வைத்துள்ளார்கள் என்பது அண்மையில் அதன் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்த கருத்துக்களிலிருந்து தெளிவாகின்றது.
புலிகளுக்கு ஆதரவான அவரின் கூற்றுக்களை இலங்கை அரசாங்கம் கண்டிக்கின்றது. அவற்றை நிராகரிக்கின்றது.
இலங்கையின் பூகோள ரீதியான அமைவிடத்தின் முக்கியத்துவம் குறித்து மேற்குலக நாடுகள் அக்கறை கொண்டுள்ளன. அவை அதில் ஒரு கண் வைத்துள்ளதை நாம் உணரக்கூடியதாக உள்ளது.
எப்படியாவது இலங்கையில் மேற்குலக நாடுகளுக்குத் தேவையான பொம்மை அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு பாரிய முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. அந்த முயற்சியில் மேற்குலகம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
இந்த நாட்டை மீண்டும் பிரிப்பதற்கு பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முயற்சிக்கின்றன. அவர்களின் தாளத்துக்கு ஆடும் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கின்றன.
சுயாதீனமான நாடு ஒன்றில் அவர்களின் இந்த முயற்சி குறித்து நாங்கள் ஆச்சரியமடைகின்றோம். எனினும் அவர்களின் நோக்கம் என்ன என்பது எங்களுக்கு புரிகின்றது.
எனவே வெளிநாட்டு அழுத்தங்களுக்கு தலைசாய்க்காத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் தேர்தலில் சிறந்த பெரும்பான்மை பலத்தை வழங்குமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக