19 மார்ச், 2010

புலிகள் பிரிட்டனில் புகலிடம் கோருவதைத் தடுக்க முடியாது : பிரிட்டிஷ் நீதிமன்றம்




பிரிட்டனில் பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருப்பதால் ஒருவர் புகலிடம் கோருவதைத் தடுத்துவிட முடியாது என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

1992ஆம் ஆண்டில் 19 வயதாக இருக்கும் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த 'ஆர்' என்பவரின் வழக்கிலேயே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.

விடுதலைப்புலிகள் இயக்கம், இலங்கையில் 30 வருடகாலம் நீண்டதொரு இரத்தக்களரி போராட்டத்தை நடத்தி வந்துள்ளது. 'ஆர்' 18 வயதில் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களைகீ காடுகளுடாக கொழும்புக்கு அழைத்துச் செல்லும் ஒரு நடமாடும் பிரிவுக்குத் தலைமை தாங்க அமர்த்தப்படும் வரை அவர் இயக்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவுக்குஸ பிரதம பாதுகாப்பு காவலராகவும் புலனாய்வுப் பிரிவின் போரிடும் அலகுக்கு இரண்டாவது தளபதியாகவும் இவர் பணியாற்றியுள்ளார். 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இவர் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் மேல் உத்தரவுக்காக காத்திருக்குமாறு பணிக்கப்பட்டார். ஆனால் இரண்டு மாதங்களில் தாம் தலைநகரில் இருப்பது இலங்கை அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது என்பதை இவர் அறிந்துகொண்டார்.

இவர் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்று, தாம் இலங்கை திரும்பினால் தமது இனம் காரணமாகவும் விடுதலைப்புலி உறுப்பினர் என்பதாலும் தாம் கொடுமையாக நடத்தப்படுவார் என்று கூறி அங்கேயே தமக்கு புகலிடம் தருமாறு கோரினார்.

இவர் யுத்தக் குற்றச்செயல்களை புரிந்தார் என்று கருத இடமுண்டு எனக் கூறி இவரது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

பரவலாகவும் கிரமமாகவும் யுத்தக் குற்றச் செயல்களையும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்செயல்களையும் புரிந்தமைக்கு விடுதலைப்புலி இயக்கத்தினர் பொறுப்பாளிகளாவர் என்றும் இவர் ஒரு தீவிரவாத குழுவில் உறுப்புரிமை வகித்தமை தெரிந்து கொண்டே பங்களிப்புச் செய்த ஒரு குற்றச்செயல் என்றும், ஆகக்குறைந்தது பிரச்சினைக்குள்ளான குற்றச்செயலில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்ற குற்றத்தையேனும் புரிந்துள்ளார் என்றும் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெரிவித்தது.

மேற்படி தீர்ப்பை எதிர்த்து 'ஆர்' தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் விசாரணையின்போது, விடுதலைப்புலி உறுப்பினர் என்ற வகையில் ஒரு நபர் குற்றச்செயல்களில் தெரிந்து கொண்டே ஈடுபட்டார் என்ற முடிவு தவறானது என்றும் அத்தகைய குற்றத்தை புரிவதற்கு இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தார் என்பதற்கு ஆதாரம் உண்டா என்று அரசாங்கம் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் முந்திய தீர்ப்பை தள்ளுபடி செய்து சம்பந்தப்பட்ட நபருக்கு புகலிடம் வழங்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை ஆட்சேபித்து உள்நாட்டமைச்சர் மேன்முறையீடு செய்த போதிலும் அதுவும் நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக