19 மார்ச், 2010

செனல்-4க்கு அனுப்பிய கடிதத்தின் பின்னணியில் ஜேவிபி இருக்கின்றதா? : டலஸ் சந்தேகம்



ஜெனரல் சரத் பொன்சேகா முடிந்தால் தன்னைக் கைது செய்யுமாறு பெப்ரவரி முதல் வாரத்தில் சவால் விடுத்தார். மார்ச் மாதம் மூன்றாம் வராத்தில் சனல்4 தொலைக்காட்சிக்கு இரகசியமாக கடிதம் அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தில் தான் தங்கியிருக்கின்ற இடத்தின் வரைபடத்தையும் அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தின் பின்னணியில் ஜே.வி.பி இருக்கின்றதா? என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான டலஸ் அழக பெரும தெரிவித்தார்.

கடிதத்தின் பின்னால் இருக்கின்ற அரசியலின் காரணம் என்ன? செனல் 4 தொலைக்காட்சியே புலிகளின் குரலை ஆங்கிலத்தில் கொண்டுசென்றது. அந்த நிறுவனத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும் என்பதுடன் எதிரியுடன் கள்ளக் காதல் எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"இராணுவத்திற்கு எதிராக தயாரிக்கப்பட்ட வீடியோ காட்சி தவறாது என்று நிரூபித்து விட்டோம். எனினும் அது இன்னும் மறுக்கப்படவில்லை. காட்சி உண்மையானது என நிரூபிக்கப்படவும் இல்லை. செஞ்சோலை விவகாரத்தை ஈழக் கோரிக்கையாளர்களுக்கு அப்பால் செனல்4 தொலைக்காட்சி நிறுவனமே முதன்மைப்படுத்தியது.

செனல்4 தமிழீழ யுத்த வீரனின் ஊடகமாகும். அந்த ஊடகமும் ஜே.வி.பியினால் சித்திரிக்கப்படும் சிங்கள யுத்த வீரனின் ஊடகமும் எவ்வாறு ஒன்றாக இருக்கமுடியும்?

சிவில் பிரஜை ஒருவர் அல்லது படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது இது முதல் தடவையல்லை. அமெரிக்கரின் கியூபா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களுக்கு வாழ்க்கைத் தருமாறு கோரினார்கள். ஆனால் ஜெனரல் சரத் பொன்சேகா குளிரூட்டி வசதிகள் மற்றும் சுடுநீர் இல்லை என்று தெரிவித்திருகின்றார்.

ஜெனரல் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான வரப்பிரசாதத்தை அவர் கௌரவமாக பயன்படுத்தவில்லை. தடுத்து வைக்கப்பட்டிருந்த பலர் தங்களுடைய மனைவி, பிள்ளைகளுக்குக் கடிதங்களை அனுப்பியிருந்தனர். அவையெல்லாம் வரலாற்றில் இடம்பிடித்தன. எனினும் இவர் செனல் 4 தொலைக்காட்சிக்கு எவ்வாறு களவாக கடிதம் அனுப்பினார்? ஏன் அனுப்பினார் போன்ற கேள்விகள் எழுகின்றன.

இராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் இராணுவ சட்டத்தை மதித்தல் தொடர்பில் அவரிடத்தில் சந்தேகம் எழுகின்றது. தாய்நாட்டின் எதிரியான செனல்4 தொலைக்காட்சியுடன் கள்ளக் காதல் எதற்கு?

செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோவின் பணிப்பாளர் சரத் பொன்சேகாவாக ஏன் இருக்க கூடாது?" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக