26 பிப்ரவரி, 2010

சுற்றுலாத் துறையை மேம்படுத்த இலங்கை அரசு மீண்டும் தீவிரம்


Top global news update
கொழும்பு:இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டை "சுற்றுலா ஆண்டு'ஆக அறிவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. ஒரு காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக இலங்கை விளங்கியது.

உள்நாட்டு சண்டை காரணமாக, அந்த பெருமை சீர்குலைந்தது. இதனால், சுற்றுலாத் துறை மூலம் இலங்கை அரசுக்கு கிடைத்த வருவாயும் குறைந்தது. இதற்கிடையே, ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே, 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த சண்டை, கடந்த மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. தற்போது அங்கு அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, சுற்றுலாத் துறையை மீண்டும் மேம்படுத்தி, அதன் மூலம் வருவாயை திரட்ட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்து வருகிறது. முதல் கட்டமாக, வரும் 2011ம் ஆண்டை சுற்றுலா ஆண்டாக அறிவிக்க முடிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலாத் துறை அதிகாரி அமித் சுமனபாலா கூறியதாவது:விடுமுறை நாட்களில் மாலத் தீவுக்கு தான், அதிகமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இதை இலங்கைக்கு இடம் மாற்ற, பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

மிக குறைந்த செலவில், சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்து செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.கடந்தாண்டில் 85 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்தனர். இவர்களில், 18 ஆயிரம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். மிகப் பெரிய நகரங்களில் வசிக்கும் மக்கள், எங்களின் இலக்கு அல்ல. இந்தியா போன்ற நாடுகளில், சிறிய நகரங்களில் வசிக்கும் மக்களை, இலங்கைக்கு வரவழைப்பது தான் எங்கள் திட்டம்.

புனே, ஆமதாபாத், கொச்சி போன்ற நகரங்களில் இதுகுறித்து மக்களிடையே பிரசாரம் செய்யவும் முடிவு செய்துள்ளோம். சுற்றுலாத் துறை மூலம், மீண்டும் அதிக வருவாயை பெறுவதற்கான முயற்சி தான் இது.இவ்வாறு அமித் கூறினார்.இதற்கிடையே, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அதிக அளவில் விமானங்களை இயக்கவும் இலங்கை ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக