26 பிப்ரவரி, 2010

பொன்சேகாவுக்கு எதிராக இரு வாரங்களில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத்


இரு வாரங்களில் முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படும். சட்ட மா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றுகையிலே அமைச்சர் இதனை தெரிவித்தார், அவர் மேலும் தெரிவிக்கையில்,

"குற்றவியல் சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுக்களும் வெளிநாட்டு நாணய நிதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

ஹைக்கொப் நிறுவனத்தினூடாக இராணுவத்திற்கு ஆயுதக் கொள்வனவு செய்யப்பட்டது தொடர்பில் மோசடி செய்தல், மோசடி செய்ய உதவி ஒத்தாசை அளித்தல், மோசடி செய்ய சதிசெய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இவை தவிர, இராணுவத்திற்குள் பிளவு ஏற்படுத்த முயன்றது தொடர்பாகவும், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களை பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபட்டமை தொடர்பாகவும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தனியார் வங்கியில் 75 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை மறைத்து வைத்திருந்தது தொடர்பாக வெளிநாட்டு நாணய நிதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும். உள்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதோடு இராணுவ நீதிமன்றத்தினால் தனியாக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

இராணுவச் சட்டத்தின் கீழ் சரத் பொன் சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது சரியானதே என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலங்கையின் நீதித்துறை தொடர்பில் எதிர்க் கட்சிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்னெடுத்த தவறான பிரசாரங்களுக்கு இந்தத் தீர்ப்பின் மூலம் தக்க பதில் வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறு கோரி இதற்கு முன்னரும் பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உண்மையில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஆனால் இராணுவ சட்டதிட்டங்களுக்கு அமைவாக சரத் பொன்சேகா கைதாகியுள்ளதால் அவரை விடுதலை செய்யும் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

சிவில் சட்டத்தின் கீழ் பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வழக்கு விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும் எனவும் சில நாடுகள் கோரியுள்ளன.

இந்தக் கோரிக்கைகளும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உரிய பதில் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் போக்கு மாறியுள்ளது எனவும் எனவே, இலங்கையுடன் சர்வதேச நாடுகள் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடவேண்டும் எனவும் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் டெரசிடா செபர் தெரிவித்துள்ளார்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக