15 நவம்பர், 2009


தேசிய சிறுநீரக மாற்று சிகிச்சை நிலையம் கொழும்பு மாளிகாவத்தையில் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம். ரூ. 450 மில். செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் 111 படுக்கை வசதிகள் உள்ளன. அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஏ. எச். எம். பெளசி மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர் றிஸ்வி ஷெரீப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சு.க தேசிய மாநாடு இன்று கொழும்பில்

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலிருந்தும் ஒரு இலட்சம் பிரதிநிதிகள்
35 வெளிநாட்டு பிரமுகர்களும் பங்கேற்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய மாநாடு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பில் நடைபெறுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இத்தேசிய மாநாட்டில் கலந்துகொள்கின்றன.

இன்று மாலை 3.00 மணிக்கு கொழும்பு, கெத்தாராம விளையாட்டரங்கில் நடைபெறும் தேசிய மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட சுமார் ஒருலட்சம் பேர் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், 35 நாடுகளிலிருந்து நேசக்கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். ஏற்கனவே, பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ளனர்.

இதேநேரம், கெத்தாராம விளையாட்டரங்கு உட்பட மாநாடு நடைபெறும் பகுதியைச் சூழவுள்ள பகுதிகளிலும் சுமார் 3000 பொலிஸார் பாதுகாப்பு கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் முதல் முறையாக சுதந்திரமாக நடத்தப்படுகின்ற தேசிய மாநாட்டில் முதல் முறையாக வடக் கிலிருந்தும், கிழக்கிலிருந்தும் பெருந்தொகையான தமிழ் மக்கள் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னியிலிருந்து மூவினங்களை யும் சேர்ந்த 1000 சு. க. ஆதரவாளர்கள் கட்சியின் அமைப்பாளர் சுமதிபால தலைமையில் கலந்துகொள்கின்றனர்.

தேசிய மாநாட்டைமுன்னிட்டு போக்குவரத்து பொலிஸார் விசேட போக்குவரத்து ஒழுங்குகளைச் செய்துள்ளனர்.

“இனி நாம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப் பொருளின் கீழ் நடைபெறும் இத் தேசிய மாநாடு மிக முக்கியம் வாய்ந்தது என ஸ்ரீல.சு.க. முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

ஸ்ரீல.சு.க மாவட்ட அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்குதல் உட்பட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன. நாட்டு மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடிய முக்கிய அறிவித்தல்களையும் ஜனாதிபதி இந்த மாநாட்டின் போது அறிவிப்பாரென அறிவிக் கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாகவும் ஜனாதிபதி இந்த மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலா? அல்லது பொதுத் தேர்தலா? முதலில் நடத்துவதென ஜனா திபதி இன்று அறிவிப்பார்.

ஸ்ரீல.சு.க வில் இணைந்து கொண்டு உப தலைவராகப் பதவியேற்றுக் கொண் டுள்ள அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தலைமையில் முதல் முறையாக சுமார் 4000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கிலிருந்தும் முதல் முறையாக பெருந்திரளானோர் கலந்து கொள்கின்றனர்.

கடந்த சில தினங்களாக மாவட்ட மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் கட்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தேசிய ஒற்றுமை, பொருளாதாரம், அரசியல் தொடர்பில் எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் தயா ரிக்கப்பட்ட ஆலோசனைகள் மாநாட்டில் முன்வைக்கப்படுமென அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீல.சு.க வின் தேசிய மாநாட்டுக்கு ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு தலைநகரில் எந்தவொரு வீதியும் மூடப்படமாட்டாது.

இன்று காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசல் காணப்படும் வீதிகள் எவை என்பது பற்றியும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வீதிகளினூடாக செல்லவேண்டாம் என பொலிஸார் தெரிவிக்கவில்லை. எனினும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதால் மாற்றுவழிகளை பயன்படுத்த முடியும் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக