25 அக்டோபர், 2009

நாடு திரும்ப மறுத்த இலங்கை பெண்ணால் பரபரப்பு

சென்னை: கோர்ட் உத்தரவுப்படி, இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க அழைத்து வரப்பட்ட இளம் பெண் ஒருவர், நாடு திரும்ப மறுத்து, ஆவணங்களை கிழித்து ஆர்பாட்டம் செய்தார். இதனால், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து, விமான நிலைய போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: இலங்கையைச் சேர்ந்தவர் நிஷாராணி (25). கடந்த சில ஆண்டுகளுக்கு முன், துபாய் சென்ற இவர், சமீபத்தில் போலி இந்தியன் பாஸ்போர்ட் மூலம் ஐதராபாத் வந்தார். இது குறித்து நடந்த வழக்கில், நிஷாராணியை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கும்படி, ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, நிஷாராணிக்கு தற்காலிக விசா மற்றும் ஆவணங்கள் ஆந்திர போலீசாரால் தயார் செய்யப்பட்டன. பின், அவரை நேற்று சென்னையில் இருந்து கொழும்பு புறப்படும் ஜெட்லைட் விமானம் மூலம் அனுப்பி வைக்க ஒரு எஸ்.ஐ., இரண்டு போலீசார் அழைத்து வந்தனர்.

ஜெட் லைட் விமானம் நேற்று பகல் 12.30 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், அந்த விமானத்தில் ஏறுவதற்காக நிஷாராணி காத்திருந்தார். இந்நிலையில், அவரிடம் இருந்த தற்காலிக விசா உள்ளிட்ட ஆவணங்களை நிஷாராணி கிழித்து எறிந்தார். "இலங்கையில் யாரும் இல்லை. நான் அங்கு போகமாட்டேன்' என்று கூச்சலிட்டார். இந்த தகவல் அறிந்த ஜெட் லைட் விமான பைலட், நிஷாராணியை விமானத்தில் ஏற்ற மறுத்து விட்டார்.

கோர்ட் உத்தரவை எப்படியும் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற நிலையில், நிஷாராணியின் இந்த செய்கையினால் அதிர்ச்சியடைந்த ஆந்திர போலீசார், அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் அழைத்து வந்தனர். அங்கு, நிஷாராணியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிஷாராணிக்கு மீண்டும் ஒரு தற்காலிக விசா உள்ளிட்ட ஆவணங்களை பெறுவது என்றும், அதன்பின் அவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பது என்றும் முடிவாகியது. சென்னை விமான நிலைய பன்னாட்டு புறப்பாடு முனையத்தில் நடந்த இந்த சம்பவத்தால், நேற்று அங்கு பரபரப்பு ஏற்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக