17 நவம்பர், 2009

மீள்குடியேற்றம், நிவாரணக் கிராமங்கள் குறித்து கூட்டமைப்பு திருப்தி

‘நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வசதி; அரசுக்கு நன்றி’

நிவாரணக் கிராமங்களுக்கும், மீள்குடி யேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களுக்கும் நேற்று நேரில் விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் இங்குள்ள மக்களுக்கு செய்து கொடுத்துள்ள வசதிகளையிட்டு திருப்தி தெரிவித்துள்ளனர்.

நிவாரணக் கிராமங்கள் உட்பட மன் னார், கிளிநொச்சி, துணுக்காய் பிர தேசங்களுக்கு நேரில் சென்று பார்வை யிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கி யிருந்தது.

இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று அங்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துவிட்டு திரும்பியது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், யாழ். மாவட்ட எம். பிக்களான எஸ். சிறிகாந்தா, எம். இமாம், மட்டக்களப்பு மாவட்ட எம். பி. அரியநேந்திரன் மற்றும் அம்பாறை மாவட்ட எம். பி. தோமஸ் வில்லியம் ஆகியோரே மேற்படி பிரதேசங்களுக்கு விஜயம் செய்து நிலைமைகளை விரிவாக ஆராய்ந்ததுடன், நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இவர்களது இந்த விஜயத்திற்கான விமான மற்றும் ஹெலிகொப்டர் வசதிகளையும் அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது.

இந்த விஜயம் தொடர்பாக சிவநாதன் கிஷோர் எம். பியுடன் தினகரன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்கையில்:-

“நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறுகிய காலத்திற்குள் எமது மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்து அவர்களை மீளக்குடியமர்த்தவும் செய்துள்ளது.

நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும், மீளக் குடியமர்ந்துள்ள மக்களையும் நாங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த மக்கள் மிகவும் திருப்தியான முறையில் உள்ளனர்.

அந்த மக்கள் மத்தியில் சந்தோஷத்தை காணக் கூடியதாக இருந்தது. மக்களின் சந்தோஷமே எமது திருப்தியாகும் என்று தெரிவித்த அவர் இதற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் வன்னி சென்றடைந்த எம். பிக்களை வரவேற்ற வன்னி தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி தொடர்பாக விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற் றுள்ளது.

அதனைத் தொடர்ந்து எம். பிக்கள் செட்டிக் குளம், ஆனந்த குமாரசுவாமி, அருணாச்சலம் ஆகிய நிவாரண கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடி யுள்ளனர்.

இதேவேளை மன்னார் கட்டுக்கரைக்குளம், மன்னார் பாலம் புனரமைப்பு வேலைத் திட்டம் நடைபெறும் இடங்களுக்கும் விஜயம் செய்ததாக வன்னி எம்.பி. சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

அடம்பன், மல்லாவி, துணுக்காய், மாங்குளம் போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்த இவர்கள் மீளக் குடியேறிய மக்களுடனான சந்திப்பிலும் கலந்து கொண்டனர். இவர்களுடன் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாட் பதியுதீன், வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, வட மாகாண ஆளுநர் உட்பட பாதுகாப்பு தரப்பு உயர் அதிகாரி களும் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் கருங்கண்டல் ஆகிய இடங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்தனர்.

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வன்னியில் இடம் பெறும் மீள்குடியேற்றம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் நிலக் கண்ணி வெடி அகற்றல் இடம்பெறும் இடங்களையும் பார்வையிட இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 2010 ஆண்டு ஜனவரியுடன் நிவாரண கிராமங்களில் தங்கியுள்ளவர்களின் மீள்குடியேற்றம் நிறைவுக்கு வரும் என படை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக