17 நவம்பர், 2009

பல்லாயிரக்கணக்கானோர் வாழும் முகாம்களில் அடிப்படை வசதிகளை எதிர்பார்க்க முடியாது:ஸ்ரீகாந்தா


மக்கள் வாழ்கின்ற முகாம்களில் முழுமையான வசதி வாய்ப்புகளை எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் திருப்தியான அளவுக்கு செய்துகொடுக்கப்பட்டு இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான விடிவினைப் பெற்றுக்கொள்வதற்கு ஆக்கபூர்வமான அணுகுமுறைகளையே கையாள வேண்டும். அதற்கு எமது வன்னிப் பயணம் உதவும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் பயணத்தின் மூலம் பல விடயங்களை நேரடியாக அவதானிக்கக் கூடியதாவும் இருந்தது என்றும் அவர் சொன்னார்.

இடம்பெயர்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா நலன்புரி முகாம்களுக்குச் செல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கம் முதன் முதலாக அனுமதி அளித்ததன் அடிப்படையில், அக்கட்சியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு நேற்று திங்கட்கிழமை செட்டிக்குளம் முகாம்கள் மற்றும் வடக்கின் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு விஜயம் செய்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களான என். ஸ்ரீகாந்தா, சிவநாதன் கிஷோர், செல்வம் அடைக்கலநாதன், தோமஸ் வில்லியம், வினோ நோகராதலிங்கம், பி. அரியநேத்திரன் மற்றும் ஆர்.எம். இமாம் ஆகியோரே இந்த விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, வட மாகாண ஆளுநர் மற்றும் வன்னிக் கட்டளைத் தளபதி ஆகியோரும் அரசு தரப்பில் இக்குழுவில் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

வன்னி விஜயம் தொடர்பில் ஸ்ரீகாந்தா எம்.பி. மேலும் கூறுகையில்,

"முகாம்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் உரையாடுவதற்கும் மற்றும் அவர்களது குறை நிறைகளைக் கேட்டறிவதற்கும் எம்மால் முடியுமாக இருந்தது.

விரைவில் சொந்த இடங்களுக்கு...

ஆயினும், முகாம் வாழ்க்கை நீண்ட காலத்திற்குத் தொடரமுடியாது. எனவே, தமது சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிவிட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

அத்துடன், அருகே உள்ள முகாம்களுக்குச் சென்று தமது உறவினர்களைப் பார்ப்பதற்கும், அவர்களின் தேவைகளை நிறைவுசெய்து கொள்ளும் வகையில், பாஸ் நடைமுறைகளை இலகுபடுத்துவது தொடர்பிலும் அவர்களது கோரிக்கை அமைந்திருந்தது.

அத்துடன், உணவு விடயத்தைப் பொறுத்தவரையில் போதுமான மரக்கறிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும், புலிச் சந்தேக நபர்கள் என வேறுபடுத்தப்பட்டவர்களின் மனைவி, பிள்ளைகள் எந்தவித வசதிகளும் அற்றவர்களாக இருப்பதனால், அந்தத் தேவைகளையும் நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டனர்.

இவ் விடயங்கள் தொடர்பில் நாம் உடனடியாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி மற்றும் வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சமல் குணரட்ன ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்தோம்.

இங்கு குழந்தைகளுக்கான பால் மா மற்றும் சுகாதார வசதிகள் போதியளவில் காணப்படுவது அவதானிக்க முடிந்தது. அதுமட்டுமல்லாது, அங்கு வாழ்கின்ற மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு இருக்கின்றனர். எது எவ்வாறிருப்பினும் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு, வீடுகளுக்குச் செல்லாத வரையில் அவர்களது மனக் கவலை நீடித்துக் கொண்டே தான் இருக்கும்.

இதனையடுத்து, மீள்குடியேற்ற பிரதேசங்களான விடத்தல்தீவுக்கு அருகிலுள்ள சில கிராமங்களுக்கும் துணுக்காய் மற்றும் கருங்கண்டல் ஆகிய பிரதேசங்களுக்கும் நாம் சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்தோம்.

மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் பல்வேறு இழப்புக்களை சந்தித்திருந்தாலும் தமது சொந்த இடங்களுக்கு வந்து விட்டோம் என்ற உற்சாகத்தையும் திருப்தியையும் அவர்களில் காணக்கூடியதாக இருந்தது. இவர்களுக்கு அரசாங்கம் உதவி வழங்கியுள்ள போதிலும் அதற்கும் மேலதிகமான தேவைகளை எதிர்நோக்கியிருப்பதால் சமூக தொண்டு நிறுவனங்களின் உதவிகளும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளும் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றன.

இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் கடந்த காலங்களில் தமது சொத்து, வீடு, காணிகள், விவசாய நிலங்கள், விவசாய உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் என சகலதையும் இழந்துள்ளனர் என்பதை மறந்து விடக்கூடாது.

துரிதகதியில் மீள்குடியமர்வு

மீள்குடியேற்றத்தை பொறுத்தவரையில் அது துரிதகதியில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை காண முடிகின்றது. அதேபோல் கண்ணிவெடி அகற்றும் பணிகளும் தங்குதடையின்றி சீராக இடம்பெற்று வருவதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

பல இடங்களில் பாரியளவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதன் காரணத்தாலேயே மீள்குடியேற்ற பணிகள் சற்று தாமதம் அடைந்திருப்பதாக எம்முடன் வந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். கண்ணிவெடி அகற்றும் பணிகளில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் அதனை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்படியான விடயங்களை அவதானிப்பதற்காகவே நாம் அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தோம். அதற்கமைய தற்போது இந்த சந்தர்ப்பத்தை ஒரு ஆக்கபூர்வமான பயணமாகவே கருதுகிறோம். விரும்புகிறோம். இதன் மூலம் பல்வேறு விடயங்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எடுத்துக் கூறவுள்ளோம்.

எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் பூரணப்படுத்தப்படும் என்றும் அதே காலப் பகுதிக்குள் பெரும்பாலானோர் மீள்குடியேற்றப்பட்டு விடுவார்கள் என்றும் அதிகாரிகள் எமக்குத் தெரிவித்தனர்.

இதேவேளை, மன்னார் வீதியில் முருங்கனுக்கருகே உள்ள இராட்சத குளத்தின் அணையின் புனர்நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜப்பான் உதவியுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் மன்னார் பிரதேச மக்களின் விவசாய தேவைகளுக்கு இது பேருதவியாகவும் ஆறுதலாகவும் இருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது மற்றும் அவர்களின் விடயங்களில் தலையிடுவது தொடர்பில் குறிப்பிட்ட வரையறைக்கு மேல் செல்ல முடியாதிருப்பதை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டும் புரிந்துகொண்டும் இருக்கின்றனர்" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக