17 நவம்பர், 2009

எனது எதிர்கால நடவடிக்கை தொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பேன் அதுவரை காத்திருங்கள் என்கிறார் ஜெனரல் சரத் பொன்சேகா


நாடும், நாட்டு மக்களும் திருப்தியடையும் வகையில், உயரியதொரு சேவையினை வழங்கும் நோக்கிலான வேலைத்திட்டமொன்றில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஓய்வுபெற்ற கூட்டுப்படைகளின் பிரதானி யுமான ஜெனரல் சரத் பொன்சேகா தனது பிரியாவிடை உரையில் தெரிவித்தார். இராணுவத்தின் பல்வேறு தரங்களிலும் பணியாற்றிய,போது தன்னால் முடிந்தளவு நாட்டுக்காக முழு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய மன மகிழ்வுடன் ஓய்வு பெறுவதாகத் தெரிவித்த ஜெனரல் சரத் பொன்சேகா, தனது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஜெனரல் சரத் பொன்சேகா ஓய்வு பெறுவதை முன்னிட்டு, நேற்றுக்காலை இராணுவ தலைமையகத்தில் பிரியாவிடை நிகழ்வொன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஜெனரல் சரத் பொன்சேகா சகல ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.

இதனையடுத்து அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறுகையில்,

நாட்டில் ஊடுருவியிருந்த பயங்கரவாதத்திலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்கள், உறவினர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதோடு போர் நடவடிக்கைகளின் போது உயிர்த் தியாகம் செய்த, அங்கவீனமுற்ற படை வீரர்களையும் நினைவு கூருகிறேன்.

எது எவ்வாறெனினும் நாட்டுக்கு நான் உயரிய சேவையொன்றை வழங்கியுள்ளேன் என்னும் திருப்தி எனக்குள் உள்ளது. அந்த நாற்பது வருடகால திருப்திகரமான சேவை மகிழ்வுடன் இன்று (16ஆம் திகதி) ஓய்வு பெறுகின்றேன்.

மக்களுக்கான இந்த சேவை எதிர்வரும் காலங்களிலும் தொடரும். அதற்கான வேலைத்திட்டமொன்றில் ஈடுபடவுள்ளேன். அது எவ்வாறானதொரு வேலைத்திட்டம் என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் அறியத்தருகிறேன்.

நான் இந்த இடத்தில் சீருடை அணிந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி. அதனால் குறித்த வேலைத்திட்டம் எவ்வாறானது என்பது தொடர்பில் இப்போது எதனையும் தெரிவிக்க முடியாது. அதனால் இன்னும் ஓரிரு நாட்கள் எனக்கு அவகாசம் தாருங்கள். என்னுடைய தீர்மானம் தொடர்பில் அறியத்தருகிறேன். இதேவேளை என்னுடைய ராஜினாமாக் கடிதம் தொடர்பிலும் சில விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. நான் ஊடகங்களுக்கு வெளியிட்ட கடிதத்திலும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்திலும் மாற்றங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. எது எவ்வாறெனினும் நான் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதமே ஊடகங்களிலும் வெளியிடப்பட்டிருந்தது என்பதே உண்மையாகும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக